இந்தியா

கேரள அரசியலில் சர்ச்சையை கிளப்பும் 30 கிலோ தங்கக் கடத்தல்.. யார் இந்த ஸ்வப்னா சுரேஷ்?

webteam

திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக துணை தூதரக விலாசத்திற்கு, விமானம் மூலம் வந்த 13 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கத்தை கேரள சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கில் கேரள முதல்வரின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஐ.டி., பிரிவின் தற்காலிக ஊழியராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ் சிக்கியிருப்பது கேரள அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் வழியே கேரளாவிற்குள் தங்கம் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகளின் அதிரடி சோதனையில், 13 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ எடையுள்ள தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்து இதுதொடர்பாக ஸரித் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இவர் இதற்கு முன்பு ஐக்கிய அரபு நாடுகளின் தூதரகத்தில் வேலை செய்தவர் என்பதும் அதன் பிறகு பல்வேறு ஒழுங்கீன செயல்களால் தூதரகத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

மேலும், இந்தத் தங்கம் கடத்தலில் யு.ஏ.இ தூதரகத்தில் முன்பு பணிபுரிந்த ஸ்வப்னா சுரேஷ் என்பவருக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஸ்வப்னா சுரேஷ், தற்போது கேரள முதல்வர் பினராயி விஜயன் கட்டுப்பாட்டில் இயங்கும் ஐ.டி., துறையில் பணியாற்றுகிறார். இவருக்கான ஆறு மாத ஒப்பந்த பணி கடந்த ஜூன் மாதமே முடிந்தும் அவர் கேரள அரசின் ஐ.டி., துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் “ஸ்பேஸ் பார்க்”க்கில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

இதையடுத்து ஸ்வப்னா சுரேஷின் வீட்டிற்கு சென்ற சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அங்கு பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த ஸ்வப்னா சுரேஷிற்கும் கேரள ஐ.டி., துறையின் செயலாளராக இருக்கும் சிவசங்கருக்கும் தொடர்பு இருந்ததாகவும், சிவசங்கர் அடிக்கடி ஸ்வப்னா சுரேஷின் வீட்டிற்கு வந்து செல்வதையும் ஸ்வப்னா சுரேஷ் வசிக்கும் பிளாட்டின் சுற்றுப்புறமுள்ள குடியிருப்புவாசிகள் தெரிவித்ததை சுங்கத்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

ஒரு கடை நிலை ஊழியர் வீட்டிற்கு துறையின் அரசு செயலர் வந்து செல்வதும் சுங்கத் துறையினருக்கு சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. அதோடு, ஸ்வப்னா சுரேஷ் இது போன்று 10 முறை இதே “டிப்ளமேட்டிக் பார்சல்” மூலம் தங்கம் கடத்தியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் சிக்கியதும் கேரள முதல்வர் அலுவலகத்தில் இருந்து இரண்டு மூத்த அதிகாரிகள் சுங்கத் துறையினருக்கு பேசி பரிந்துரைத்ததாகவும் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கேரள தலைமைச் செயலகம் கடத்தல்காரர்களின் கூடாரமாக மாறிவிட்டதாகவும் முதல்வர் அலுவலகத்துக்கும் தங்கம் கடத்தலுக்கும் தொடர்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.