கேரளாவில் அடுத்து வரும் நாட்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவுக்கு அதிக மழைப்பொழிவை தரும் தென்மேற்கு பருவமழை ஜுன் 8ஆம் தேதி தொடங்கியது. ஆனால் நடப்பு ஆண்டில் எதிர்பார்த்த அளவை விட குறைவாகவே மழை பெய்துள்ளது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழையின் இரண்டாவது சுழற்சி நாளை முதல் அதாவது புதன்கிழமை முதல் தொடங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை கனமழை முதல், மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் இடுக்கி, மலப்புரம், வயநாடு, கன்னூர், எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
6 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் 20 சென்டி மீட்டர் மழை பதிவாக வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. மிக கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படலாம் என்பதால், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.
தாலுகா அளவில் கட்டுப்பாட்டு அறைகளை திறந்து வைக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கேரள எல்லையில் உள்ள தமிழக மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.