இந்தியா

மூணாரில் யானைகள் சரணாலயம் - கேரள வனத்துறை முடிவு

webteam

மூணார் அருகே யானைகள் சரணாலயம் கட்டப்படும் என கேரள வனத்துறை அறிவித்துள்ளது

சமீப காலமாக கேரளாவின் மூணார் அருகே ஆணயிரங்கல் மற்றும் சின்னக்கானல் பகுதிகளில் யானைகளால் பெரும் அச்சுறுத்தல் நிலவி வருகிறது. யானைகளின் வழித்தடம் என்று சொல்லக்கூடிய அப்பகுதியில் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்படுகின்றன. இதனை கருத்தில் கொண்ட கேரள வனத்துறை அப்பகுதியில் யானைகள் சரணாலயம் கட்ட முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஆணயிரங்கல் மற்றும் சின்னக்கானல் பகுதிகளில் நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்னை சரியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சரணாலயம் கட்டப்பட்டால் யானைகளை பாதுகாக்க முடியுமென்றும், யானை - மனித மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமென்றும் கேரள அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து பேசிய தலைமை வனவிலங்கு காப்பாளர், சுரேந்திரகுமார், ஆணயிரங்கல் மற்றும் சின்னக்கானல் பகுதிகளில் 6கிமீ சுற்றளவில் யானைகள் சரணாலயம் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.அப்பகுதிக்குள் வரும் குடியிருப்புகள் வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்படும். சரணாலயம் யதார்த்தமாக உருவாக்கப்பட்டால் யானைகளுக்கு இயற்கை வாழிடமாக இருக்குமென தெரிவித்துள்ளார்.

2002-2003ம் ஆண்டுகளின் போது மூணார் அருகேயுள்ள சிணகுகண்டம் பகுதியில் 80 ஏக்கர் அளவில் பொதுமக்களுக்கு குடியிருப்பு பகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் யானைகளின் வழித்தடத்தை அப்பகுதி பெருமளவில் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது.

அதன்பின்பு யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான மோதல்கள் அதிகமாயின. மூணார் வனப்பகுதிக்குட்பட்ட பகுதிக்குள் 2010 வரை யானை தாக்கி 28 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு அப்பகுதியில் இருந்து பல குடும்பங்கள் மாற்று இடத்தில் குடிபெயர்ந்தனர். இந்நிலையிலேயே அப்பகுதியில் யானைகள் சரணாலயம் கட்ட கேரள வனத்துறை முடிவெடுத்துள்ளது.