இந்தியா

கடலில் தத்தளித்த 79 கேரள மீனவர்கள் மீட்பு

webteam

ஒகி புயலால் கடலில் தத்தளித்த 79 கேரள மீனவர்களை கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

தமிழகத்தைக் கடந்து சென்ற ஒகி புயல், லட்சத்தீவுகள் அருகே நிலை கொண்டுள்ளது. இதனால் கேரள கடலோரப் பகுதிகளில் கடும் காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடலில் மீன்பிடிக்கச் சென்ற கேரள மீனவர்கள், கடும் காற்றில், நடுக்கடலில் தத்தளித்து வருவதாக கேரள கடலோர காவல் படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுமார் 9 படகுகளில் கடலோர காவல் படையினர் விரைந்தனர். 

கடலில் 150 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த மீனவர்களை, டார்னியர் ஹெலிகாப்டர் மூலம் கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர். கப்பல் மூலமும், ஹெலிகாப்டர் மூலமும் இதுவரை மொத்தம் 79 மீனவர்கள் மீட்கப்பட்டிருப்பதாக காவல்படையினர் தெரிவித்தனர். அதேசமயம், மொத்தம் 25 படகுகளில் வந்த 250 மீனவர்கள் புயலில் சிக்கியிருப்பதாக மீன்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்களை மீட்பதற்கான தொடர் நடவடிக்கைகளை கடலோர காவல்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.