இந்தியா

திருவனந்தபுரத்தில் இங்கிலாந்து பெண் சுற்றுலாப் பயணிக்கு பாலியல் தொல்லை

JustinDurai

திருவனந்தபுரத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி, 5 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார்.

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள அடிமலத்துரா அருகே இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாகக் கூறப்படுகிறது. அவர் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து சோவாரா கடற்கரைக்கு சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

தகவல்களின்படி, அவர் தங்கியிருந்த ரிசார்ட்டின் மனிதவள மேலாளரால் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில்,  விமான நிலையத்திலிருந்து இங்கிலாந்து பெண்ணைத் தொடர்பு கொண்ட டாக்ஸி டிரைவர் ஆண்டனி, அப்பெண்ணை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். அந்த பெண் ரிசார்ட்டில் இருந்து  சோவாரா கடற்கரையை நோக்கி சென்றபோது, ஆண்டனி தனது நான்கு கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர் தங்கியிருந்த ஹோட்டலின் சமையல்காரர் குறுக்கீட்டு இங்கிலாந்து பெண்ணை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் அந்த கும்பல் சமையல்காரரை சரமாரியாக தாக்கியது.

இச்சம்பவம் தொடர்பாக புகார் அளித்தபோது முதலில் போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை என்றும் காவல்துறை உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகே வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் கடலோரப் பகுதிகளில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தாக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.