பஹல்காம் pti
இந்தியா

பஹல்காம் தாக்குதல் | சின்ன தாமதங்களால் தள்ளிப்போன பயணம்.. நூலிழையில் உயிர் பிழைத்த நபர்கள்!

ஓட்டலில் பரிமாறப்பட்ட உணவில் அதிகமாக இருந்த உப்பின் காரணமாக, பஹல்காமுக்கு செல்ல இருந்த கேரள குடும்பத்தினர், அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பி உள்ளனர்.

PT WEB

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) பிரதிநிதியான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது.

இந்த நிலையில், ஓட்டலில் பரிமாறப்பட்ட உணவில் அதிகமாக இருந்த உப்பின் காரணமாக, பஹல்காமுக்கு செல்ல இருந்த கேரள குடும்பத்தினர், அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பி உள்ளனர். கொச்சியில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆல்பி ஜார்ஜ் என்பவரின் குடும்பத்தினர், பஹல்காமுக்குச் செல்ல இருந்தனர். பஹல்காமுக்கு செல்லும் வழியில், பசி எடுக்கவே, அவர்கள் சாலையோரம் இருந்த உணவகத்தில் உணவருந்தச் சென்றனர். அங்கு வழங்கப்பட்ட உணவில் உப்பு அதிகமாக இருந்ததால், மீண்டும் புதிதாக உணவு சமைத்துக் கொடுக்க, உணவக ஊழியர்கள் சென்றுள்ளனர்.

பஹல்காம்

இதனால் நேரம் ஆகவே, அதற்குள் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் அரங்கேறியதாகவும், இதை அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்ததாகவும் தெரிவித்த ஆல்பி ஜார்ஜ் குடும்பத்தினர், கடவுள்தான் தங்களை காப்பாற்றியதாக தெரிவித்துள்ளனர்.

இதேபோல், சவாரி செய்வதற்கான குதிரைகள் வர தாமதமானதால், மஹாராஷ்டிராவை சேர்ந்த 28 பேர் பஹல்காமில் நடந்த தாக்குதலில் இருந்து தப்பித்துள்ளனர். இதற்கிடையே, அசாமை சேர்ந்த பேராசிரியர் ஒருவர், இஸ்லாமியர்களின் குர்ஆனை ஓதி, பயங்கரவாதிகளின் தாக்குதலில் இருந்து தப்பித்ததாக தெரிவித்துள்ளார்.