இந்தியா

கிலோ கணக்கில் மாம்பழங்களை திருடிய காவல் அதிகாரி.. கேரளாவில் நடந்த அதிர்ச்சிகர செயல்!

JananiGovindhan

போலீஸ் அதிகாரி ஒருவர் கிலோ கணக்கில் மாம்பழத்தை திருடிக்கொண்டு சென்ற சம்பவம் கேரளாவில் அரங்கேறியிருக்கிறது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொது மக்களையும் சமூகத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் போலீஸ் அதிகாரியே இப்படி செய்திருப்பது முறையாக கடமையாற்றும் பிற காவல்துறையினருக்கே களங்கம் ஏற்படுகிறது. அந்த வகையில்தான் கேரளாவின் இடுக்கி பகுதியைச் சேர்ந்த காவல் அதிகாரி ஒருவர் செய்த செயல் முகம் சுழிக்க வைத்திருக்கிறது.

இடுக்கி ஏ.ஆர்.கேம்ப் பகுதியின் காவலராக இருக்கும் ஷஹீப் என்பவர் அண்மையில் வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு தன்னுடைய ஸ்கூட்டரில் சென்றிருக்கிரார். செல்லும் வழியில் சாலையோரத்தில் மாம்பழ கடை ஒன்று இருந்திருக்கிறது. ஆனால் கடையில் எவரும் இருக்கவில்லை.

இதனைக் கண்ட ஷஹீப் சுற்றி முற்றி பார்த்துவிட்டு மாம்பழக் கூடையில் இருந்த பழங்களை அவசர அவசரமாக எடுத்து தன்னுடைய ஸ்கூட்டரின் அடியில் வைத்திருக்கிறது. கிட்டத்தட்ட 10 கிலோ அளவுக்கு இருக்கும் 600 ரூபாய் மதிப்புள்ள மாம்பழங்களை போலீஸ் அதிகாரி ஷஹீப் திருடியிருக்கிறார்.

மாம்பழங்களை திருடும் போது எவரும் தன்னை பார்த்து விடுவாரா என அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டே இருந்தார். ஆனால் அவருக்கு மேலே சாலையில் உள்ள கம்பத்தில் சிசிடிவி கேமிரா பொறுத்தப்பட்டிருந்ததை ஷஹீப் அறிந்திருக்கவில்லை.

இது குறித்து சம்பவம் அறிந்த இடுக்கி மாவட்ட காவல்துறை ஷஹீப் மீது கஞ்சிரப்பள்ளி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. “முதலில் சிசிடிவி காட்சியை பார்த்த போது ஹெல்மெட், ஜெர்கின் அணிந்திருந்ததால் மாம்பழங்களை திருடியது யார் என உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் ஸ்கூட்டரில் இருந்த வாகன எண்ணை வைத்து இந்த வேலையை செய்தது ஷஹீப் என கண்டறியப்பட்டிருக்கிறது” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.