இந்தியா

சிஏஏவுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம்..!

jagadeesh

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று காலை கூடிய சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில், முதலமைச்சர் பினராயி விஜயன் இந்த தீர்மானத்தை கொண்டுவந்தார். அப்போது பேசிய அவர், தடுப்பு முகாம்கள் கேரளாவில் அமைக்கப்படாது என்றும் உறுதியளித்தார்.

கிரேக்கர்கள், ரோமானியர்கள், அரபிகள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்தியா வந்து சென்றுள்ளனர் என்றும் நாட்டில் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் நீண்ட காலத்துக்கு முன்பே இந்தியா வந்ததற்கான வரலாறு இருப்பதாக பினராயி விஜயன் சுட்டிக்காட்டினார். இந்தியாவின் பாரம்பரியத்தை சட்டப்பேரவை தொடர்ந்து காக்க வேண்டும் என்றும் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டார்.

நேற்று எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா மற்றும் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் உள்பட அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்தில் ஒருமித்த முடிவு எடுத்தபின்னர் கேரள சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.