சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு பின்வாங்கவில்லை என்று முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஐப்பசி மாத வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது. நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து கோயிலுக்கு பெண்கள் சிலர் சென்றனர். ஆனால் கோயிலுக்குச் சென்ற பெண்களை வழியிலேயே போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு பதட்டமான சூழல் நிலவியது.
தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கத் தலைவர் ஷியாலஜா விஜயன், கேரள பிராமணர் சங்கத்தினர் என 20க்கும் மேற்பட்டோர் சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளனர். மேலும் தேவசம் போர்டும் சீராய்வு மனுவை விரைவில் தாக்கல் செய்ய போவதாக தகவல் தெரிவித்துள்ளது. தேவசம் போர்டின் முடிவினை கேரள அரசு வரவேற்பதாக அம்மாநில இந்து அறநிலையத் துறை அமைச்சர் சுரேந்திரன் தெரிவித்து இருந்தார்.
தேவசம் போர்டின் முடிவினை வரவேற்றதன் மூலம் கேரள அரசு பின்வாங்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. அதேபோல், 2 நாட்கள் கூட பாதுகாப்பு அளிக்க முடியாமல் கேரள அரசு திணறி வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில் இருந்து பின் வாங்கவில்லை என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், சபரிமலையை கலவர பூமியாக மாற்றும் நோக்கில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சபரிமலை விவகாரத்தில் சட்டத்தை மதிக்காமல் பாஜக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.