பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியா்கள், துணைவேந்தா்கள் நியமனம் தொடா்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வரைவு வழிகாட்டுதல் விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதாவது, மாநில பல்கலைக்கழக துணைவேந்தா் தேடல் குழுவில் யுஜிசி பிரதிநிதியை இடம்பெறச் செய்வது, துணைவேந்தா் பதவிக்கு தொழில் நிறுவன நிபுணா்களையும் நியமிப்பது, கலை-அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியா் பணிக்கு எம்.இ., எம்.டெக். முடித்தவா்களை அனுமதிப்பது எனப் பல்வேறு மாற்றங்களுடன் வரைவு வழிகாட்டுதலை யுஜிசி அண்மையில் வெளியிட்டது. இதற்கு, தமிழகம், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், ”யுஜிசி வரைவு விதி ஜனநாயகத்துக்கு விரோதமானது” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதிதொடர்பாக திருவனந்தபுரத்தில் யுஜிசி வரைவு விதி எதிர்ப்பு மாநாட்டில் பேசிய அவர், “யுஜிசி வரைவு விதி ஜனநாயகத்துக்கு விரோதமானது. யுஜிசியின் புதிய விதி பல்கலை நிர்வாகத்தில் மாநில அரசுக்கு உள்ள பங்கை நிராகரிக்கிறது. யுஜிசி வரைவு விதி கூட்டாட்சி முறைக்கு முரணானது. யுஜிசியின் புதிய விதி துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநர் கையில் வழங்க வழிசெய்கிறது. நாட்டின் உயர்கல்விக்கே பெரிய அச்சுறுத்தலாக யுஜிசியின் வரைவு விதி உள்ளது. கல்வித்துறையில் தொடர்பே இல்லாதவர்களை துணைவேந்தராக நியமிக்க வரைவு விதி வழி செய்கிறது. வரைவு விதியை பின்பற்றாமைக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைகளும் மிகக் கடுமையாக உள்ளன” என்றார்.
தொடர்ந்து அவர், “யுஜிசி வரைவு விதி காரணமாக அரசியல் பின்புலம் உள்ளவர்கள் துணைவேந்தராக நியமிக்க வாய்ப்புள்ளது. கல்வித்துறை சாராதவர்களை நியமித்தால் உயர்கல்வியின் தரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும். ஒரு துறையில் அடிப்படை பட்டம் பெறாதவரை விரிவுரையாளராக நியமிக்க வகை செய்யும் விதி உயர்கல்வி தரத்தை குறைத்துவிடும். வரைவு விதி தனியொரு நடவடிக்கையல்ல; மாநில அரசின் உரிமைகளை பறிப்பதற்கான நடவடிக்கைகளில் ஒன்றே யுஜிசி வரைவு. மாநில அதிகாரத்தை பறிக்கும் வகையில் கல்வி, விவசாயம், மின்துறை உள்பட பல துறைகள் சார்ந்து மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. மாநில அரசுக்கான நிதியை அபகரிக்கும் வகையில் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்கிறது. உயர்கல்வி நிறுவனங்களை நிர்வகிப்பதற்கான செலவில் 80 சதவீதம் மாநில அரசின் நிதியில் இருந்தே மேற்கொள்ளப்படுகிறது.
கேரளாவில் பல்கலைக்கழகங்களை நிர்வகிக்க உயர்கல்வித்துறை மூலம் ரூ.18.24 கோடியை மாநில அரசு செலவு செய்துள்ளது. பல்கலைக்கழகத்தை நிர்வகிப்பதில் இருந்து மாநில அரசுகளை முழுமையாக விலக்கிவைப்பதே யுஜிசி வரைவு விதியின் நோக்கம். உயர்கல்வித் துறையை வணிகமயமாக்குவதற்கு யுஜிசி வரைவு விதி வழிவகுக்கிறது. உலக நாடுகள் புதியவற்றை கண்டுபிடிக்க பணம் செலவிடும் நேரத்தில் புராணங்களை உண்மை எனக் கூற மத்திய அரசு செலவு செய்கிறது. இந்தியாவில் உள்ள உயர் ஆராய்ச்சி நிறுவனங்கள்கூட புராணம், இதிகாசங்களை உண்மை என கூறிக்கொண்டு இருக்கின்றன. இந்த மாநாடு உயர்கல்வியை முற்போக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் கொண்டு செல்லும் வகையில் அமையும்” எனத் தெரிவித்துள்ளார்.