இந்தியா

ஐயப்பன் கோபத்திற்கு ஆளாகிவிட்டார் பினராய் விஜயன்” - பாஜக, காங்கிரஸ்

ஐயப்பன் கோபத்திற்கு ஆளாகிவிட்டார் பினராய் விஜயன்” - பாஜக, காங்கிரஸ்

webteam

சபரிமலை ஐயப்பனின் கோபத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் சம்பாதித்துள்ளதாக காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

சபரிமலையில் இரு பெண்கள் ஐயப்பனை தரிசனம் செய்த நிலையில் இது தொடர்பாக ஆதரவும் எதிர்ப்பும் குவிந்து வருகின்றன. கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா கூறும்போது, சபரிமலையில் காவல்துறையின் பாதுகாப்புடன் பெ‌ண்கள் தரிசனம் செய்துள்ளது ஏராளமான பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பாக மாநிலமெங்கும் காங்கிரஸ் கட்சி போராட்டங்களை மீண்டும் தொடக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

ஐயப்பனின் கோபத்தை மார்க்சிஸ்ட் அரசு சம்பாதித்துள்ளதாக மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை தெரிவித்துள்ளார். கம்யூனிஸ்ட் தலைவர்களும் அவர்களின் சந்ததிகளும் ஐயப்பனின் கோபப் பார்வைக்கு ஆளாவது உறுதி என்றும் அவர் கூறியுள்ளார். அதே ஐயப்பன் கோயிலுக்குள் இரு பெண்கள் சென்றதற்கு மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா கார‌த் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

இதற்கிடையில் பெண்களை அனுமதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப கர்மா சமிதி என்ற அமைப்பு கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளது. இதற்கு பி‌ற இந்து அமைப்புகளும், பாரதிய ஜனதா கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதற்கிடையே முழு பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்ததாக, சபரிமலை‌‌ ஐயப்பன் கோயிலில் வழிபாடு நடத்திய கனகதுர்கா தெரிவித்துள்ளார்.