இந்தியா

சபரிமலையில் தினசரி 25,000 பக்தர்களுக்கு அனுமதி - பினராயி விஜயன்

JustinDurai
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தினசரி 25 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் நவம்பர் மாதம் 17 ஆம் தேதி முதல் மண்டல மற்றும் மகர விளக்கு விழா தொடங்கவுள்ளது. இரு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தினசரி குறைந்த அளவிலான பக்தர்களே சபரிமலை ஐயப்பனை காண அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த ஆண்டு பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதில், நாளொன்றுக்கு 25 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டது. அதே போல், பம்பை நதியில் குளிப்பதற்கும் இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் இரு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் அல்லது கொரோனா நெகடிவ் சான்றிதழ் உடன் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரிசனத்திற்கு பின் பக்தர்கள் கோயிலில் தங்குவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.