கேரளா முதல்வரும் ஆளுநரும் மூணாரில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை நேரில் ஆய்வுசெய்தனர்... தேடுதல் பணியை தீவிரப்படுத்த உத்தரவு...
மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் புதையுண்டவர்களை மீட்கும் பணிகள் குறித்து கேரள மாநில முதல்வர் மற்றும் ஆளுநர் நேரில் ஆய்வு செய்தனர்.
கேரளாவில் கடந்த வாரம் மூணாறு அருகே உள்ள ராஜ மலைப்பகுதியில் உள்ள பெட்டி முடி என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் இருந்த அனைவரும் மண்ணில் புதைந்தனர். இவர்களை மீட்கும் முயற்சி கடந்த ஏழு நாட்களாக நடைபெற்று வருகிறது. ஆனால் இதுவரை 55 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில் 12 பேர் காயமுற்று சிகிச்சை பெற்று வந்தனர்.
மீதமுள்ள 15 நபர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில் மீட்புப் பணிகளை கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் கேரளா மாநில ஆளுநர் ஆசிப் முகமது கான் ஆகியோர் நேரில் சென்று மீட்பு பணிகள் நடைபெறும் விதம் குறித்தும் மீதமுள்ள 15 நபர்களை கண்டுபிடிக்க எடுக்கப்படும் வியூகங்கள் குறித்தும் கேட்டறிந்தனர்.