பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை கேரள அரசு முடுக்கிவிட்டுள்ளது.
இது தொடர்பாக புதிய தலைமுறை களத்தில் ஆய்வு மேற்கொண்டது. அதில், தேக்குவட்டை என்ற இடத்தில் கேரள அரசு தடுப்பணை கட்டி முடித்திருப்பது தெரியவந்துள்ளது. இதே போல், மஞ்சிக்கண்டி பகுதியிலும் பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டி வருவது புதிய தலைமுறையின் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. மேலும், பாடவயல், ரங்கநாதபுரம், வீட்டியூர், கீரைக்கடவு பகுதிகளில் தடுப்பணைக் கட்டுவதற்கான முதற்கட்ட ஆய்வுகளையும் கேரள அரசு நடத்தி முடித்துள்ளது. பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட கேரள அரசு முயற்சி மேற்கொண்ட போது அதனை தடுக்கும் விதமாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நிலுவையிலுள்ள போதே கேரள அரசு தடுப்பணைகள் கட்டி வருவது தமிழக விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.