சுரேஷ் கோபி india today
இந்தியா

கேரளா | முதியவர் கொடுத்த மனு.. வாங்க மறுத்த அமைச்சர் சுரேஷ் கோபி.. உறுதியளித்த சிபிஐ(எம்)!

கேரளாவில் முதியவர் கொடுத்த மனுவை மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி வாங்க மறுத்த விவகாரம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

கேரளாவில் முதியவர் கொடுத்த மனுவை மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி வாங்க மறுத்த விவகாரம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் திருச்சூர் எம்பியாகவும், மத்திய இணையமைச்சராகவும் இருப்பவர் நடிகர் சுரேஷ் கோபி. இவர், அவ்வப்போது சர்ச்சைக்குரிய செய்திகளில் இடம்பிடிப்பது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில், முதியவர் ஒருவரின் மனுவை வாங்காததை அடுத்து, மீண்டும் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறார். தனது தொகுதியில் நிகழ்ச்சி ஒன்றின்போது சமீபத்தில் சுரேஷ் கோபி மக்களைச் சந்தித்தார். அப்போது திருச்சூரைச் சேர்ந்த கொச்சு வேலாயுதன் என்ற முதியவர், தனது பாழடைந்த வீட்டின் இடிந்து விழுந்த கூரையை சரிசெய்ய உதவி செய்ய வேண்டி மனு ஒன்றை அவரிடம் அளித்தார். ஆனால், அந்த மனுவைப் பார்க்காமலேயே அவர் திருப்பி அனுப்பினார். மேலும், இது ஒரு எம்.பி.யின் வேலை அல்ல என்றும் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

இதனால் வேதனையடைந்த வேலாயுதன், “அவர் (சுரேஷ் கோபி) அதை படித்துப் பார்த்துவிட்டு தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று சொன்னாலும் பரவாயில்லை. ஆனால் அவர் அதை ஏற்றுக்கொள்ளவே இல்லை. எனக்கு நிறைய விஷயங்கள் சொல்ல வேண்டியிருந்தாலும் நான் அதிகம் சொல்லவில்லை. அவர் ஓர் அமைச்சர். அதனால் நான் எதுவும் சொல்லவில்லை” எனக் கூட்டத்தில் கண்கலங்கினார்.

இதற்கிடையே அந்த வீடியோ வைரலான நிலையில், மத்திய அமைச்சர் விமர்சனத்தை எதிர்கொண்டார். அதேநேரத்தில், திருச்சூரைச் சேர்ந்த சிபிஐ(எம்) தலைவர்கள் வேலாயுதனின் வீட்டிற்குச் சென்று அவருக்கு ஒரு புதிய வீடு கட்டித் தருவதாக உறுதியளித்தனர்.

சுரேஷ் கோபி

மறுபுறம் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த சுரேஷ் கோபி, ”நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை நான் வழங்குவதில்லை. வீட்டுவசதி என்பது ஒரு மாநிலப் பிரச்னை. எனவே, அத்தகைய கோரிக்கைகளை ஒருவரால் மட்டும் அங்கீகரிக்கவோ அல்லது முடிவு செய்யவோ முடியாது. மாநில அரசே இதைப் பற்றி சிந்திக்க வேண்டும். எனது முயற்சிகள் எப்போதும் அமைப்புக்குள் பணியாற்றுவதிலும் மக்களுக்கு உண்மையான நன்மைகளை வழங்குவதிலும் கவனம் செலுத்துகின்றன. இந்தச் சர்ச்சைக்கு அரசியல் நோக்கங்கள் இருப்பதாக, தான் நம்பினாலும், அந்த நபருக்கு உதவி கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” எனத் தெரிவித்தார்.