கேரள முதல்வர் பினராயி விஜயன் pt web
இந்தியா

கேரள மாநிலம் பெயர் மாற்றம்.. இடதுசாரி அரசின் முடிவுக்கு பாஜக ஆதரவு!

'கேரளா' என்ற பெயரை 'கேரளம்' என்று அதிகாரப்பூர்வமாக மாற்றும் நடவடிக்கைக்கு மாநில பாஜக ஆதரவளித்துள்ளது.

Prakash J

'கேரளா' என்ற பெயரை 'கேரளம்' என்று அதிகாரப்பூர்வமாக மாற்றும் நடவடிக்கைக்கு மாநில பாஜக ஆதரவளித்துள்ளது.

கேரளாவின் பெயரை மாற்றும் ஆளும் இடதுசாரி அரசின் முடிவுக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடிக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் கேரள மாநில பாஜக தலைவர் ராஜிவ் சந்திரசேகர் கடிதம் எழுதியுள்ளார். மத அடிப்படையில் மாநிலத்தை தனித்தனி மாவட்டங்களாகப் பிரிக்கக் கோரும் தீவிரவாத சக்திகளின் முயற்சிகளைத் தடுக்க இந்தப் பெயர் மாற்றம் உதவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கேரளாவில் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கேரளம் என்ற பெயர் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே இவ்விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு பெயர் மாற்றத்திற்கு உதவவேண்டும் என்றும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர், ‘மலையாள மொழி பாரம்பரியத்துடன் நெருக்கமாக தொடர்புடைய 'கேரளம்' என்ற பெயரையும் அடையாளத்தையும் அதிகாரப்பூர்வமாகப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் மாநில அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாஜக முழு ஆதரவளிக்கும்’ என தெரிவித்துள்ளார்.

kerala

கேரளாவின் பெயரை ’கேரளம்’ என மாற்றக்கோரி அம்மாநில சட்டமன்றத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கு (ஜூன் 24, 2023) முன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்றுமாறு மத்திய அரசை வலியுறுத்தி, முதல்வர் பினராயி விஜயன் இந்த தீர்மானத்தை முன்மொழிந்தார். மலையாள மொழி பேசும் சமூகங்களுக்காக ஒன்றுபட்ட கேரளாவை உருவாக்க வேண்டிய அவசியம் தேசிய சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே வலுவாக எழுந்துள்ளது என்று அவர் கூறியிருந்தார்.