இந்தியா

எதிர்க்கட்சிகள் வலையில் சிக்கிய பினராயி விஜயன்: வெடிக்கும் 700 கோடி சர்ச்சை

எதிர்க்கட்சிகள் வலையில் சிக்கிய பினராயி விஜயன்: வெடிக்கும் 700 கோடி சர்ச்சை

rajakannan

கேரள வெள்ள பாதிப்புக்கு ரூ700 கோடி தருவதாக எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை என்று ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது குறித்து கேரள எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

கேரளா மாநிலம் கடும் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு என இயற்கை சீற்றத்திற்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல அண்டை மாநிலங்களும் பல்வேறு உதவிகளை கேரளாவிற்கு செய்து வருகின்றன. இது தவிர நடிகர்கள், பொதுமக்கள் என பல தரப்பில் இருந்தும் உதவிக்கரம் நீண்டு வரும் நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி நிதியுதவி வழங்குவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடந்த வாரம் தெரிவித்து இருந்தார். 

இதையடுத்து கேரளாவுக்கு வெளிநாட்டு அரசுகள் வழங்கும் நிவாரண நிதியை மத்திய அரசு ஏற்க வாய்ப்பில்லை என்றும், சொந்த முயற்சியாகவே நிவாரணப்பணி மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முயற்சி எடுப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன. எனினும் இதுகுறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஆனால் மழை வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி ரூபாய் நிதி அளிப்பதாக செய்தி மட்டும் பரவியது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 30 லட்சம் இந்தியர்களில் 80 சதவிகிதம் பேர் கேரளாவை சேர்ந்தவர்கள். எனவே அவர்கள் நிதி உதவி அளிக்க முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, 2016ஆம் ஆண்டு தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கைப்படி வெளிநாட்டு நிதி உதவிகளை ஏற்றுக்கொள்ளலாம் என பினராயி விஜயன் தெரிவித்தார். மற்ற நாடுகள் நல்லெண்ணத்தில் தரும் நிதியை ஏற்க மத்திய அரசு முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதனால் ஐக்கிய அரபு அமீரகம் தரும் ரூ.700 கோடியை, மத்திய அரசு வேண்டாம் என தடுப்பது போல, சமூக வலைத்தளங்களில் பரப்பட்டது.

இந்நிலையில் ரூ.700 கோடி தருவதாக ஐக்கிய அரசு அமீரகம் எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை என அதன் தூதர் அமகது அல்பன்னா தெரிவித்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு நிதியுதவி அளிப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாகவும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் நிதித்தொகை இன்னும் முடிவுசெய்யப்படவில்லை என்று, அதுதொடர்பாக இன்னும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறினார். 

ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் இந்த விளக்கம் இந்த விவகாரத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது. அப்படியென்றால் எதன் அடிப்படையில் கேரள முதல்வர் அப்படி கூறினார் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.  இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் ரூ700 கோடி தருவதாக கூறியது குறித்து முதல்வர் பினராயி விஜயன் விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. 

இதுகுறித்து கேரள பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை கூறுகையில், “இந்தத் தகவலை பினராயி விஜயன் எங்கிருந்து பெற்றார் என்று விளக்கம் அளிக்க வேண்டும். யுஏஇ அளிப்பதாக கூறப்பட்ட ரூ700 கோடியை மத்திய அரசு பெற மறுத்ததை அடுத்து பிரதமர் மோடிக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன” என்றார். அதேபோல், கேரள எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான ரமேஷ் சென்னிதாலாவும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.