இந்தியா

கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: நடிகர் திலீப்பின் மனு தள்ளுபடி

கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: நடிகர் திலீப்பின் மனு தள்ளுபடி

webteam

கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வீடியோ காட்சிகளை தனக்கு வழங்க கோரிய நடிகர் திலீப்பின் மனுவை தள்ளுபடி செய்து அங்கமாலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல கேரள நடிகை கடந்த ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நடிகை அளித்த புகாரில் காரில் தான் கடத்தப்பட்டதாகும். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அதை வீடியோ எடுத்ததாகவும் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த கேரள காவல்துறையினர், நடிகை அளித்த புகாரின் பேரில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவர் கடந்த ஜூலை 10ம் தேதி கொச்சி ஆலுவா கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். 85 நாட்கள் சிறைவாசத்திற்குப்பின் கடந்த அக்டோபர் 3ம் தேதி திலீப்பிற்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது கேரள உயர் நீதிமன்றம்.

இந்நிலையில் இந்த வழக்கில் கடந்த நவம்பர் 11ம் தேதி கேரள போலீஸார் கொச்சி அங்கமாலி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்ற அறிக்கை தாக்கல் செய்தனர். முதல் தகவல் அறிக்கையில் 14வது குற்றவாளியாக இருந்த நடிகர் திலீப் குற்ற அறிக்கையில் 8வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். குற்ற அறிக்கையோடு நடிகை ஓடும் காரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வீடியோ காட்சிகளும் வழக்கின் முக்கிய ஆவணங்களாக நீதிமன்றத்தில் போலீஸாரால் சமர்ப்பிக்கப்பட்டன. 

இந்நிலையில், போலீஸாரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நடிகை பாலியல் வன்கொடுமை வீடியோ காட்சிகளில் குழறுபடிகள் நடந்துள்ளதாகவும், இதை நிரூபிக்க தனக்கு அந்த வீடியோ காட்சிகளை தனக்கு வழங்குமாறும் நடிகர் திலீப் கொச்சி அங்கமாலி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, ”நடிகர் திலிப்பிற்கு வீடியோ காட்சிகளை வழங்கினால் அது வெளியில் பரவுவதற்கும், சம்பந்தப்பட்ட நடிகையை மிரட்டுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது,” எனவும் அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அரசு தரப்பு வாதத்தை ஏற்ற கொச்சி அங்கமாலி குற்றவியல் நடுவர் நீதிமன்றம், நடிகை பாலியல் வன்கொடுமை வீடியோ காட்சிகளை வழங்க முடியாது எனவும், அத வழங்க கோரிய நடிகர் திலீப்பின் மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டது.