Mohanlal x page
இந்தியா

’’10 யானை தந்தங்கள் உள்ளன..” வழக்குக்கு மத்தியில் வனத்துறையினரிடம் தெரிவித்த மோகன்லால்!

நடிகர் மோகன்லால் யானை தந்தங்களை வைத்துக்கொள்ள மாநில அரசால் வழங்கப்பட்ட உரிமம் சட்டப்பூர்வமானது அல்ல என கூறி அதை கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

Prakash J

வனவிலங்குப் பொருட்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் வழக்கில் நடிகர் மோகன்லால் தொடர்ந்து விசாரணையை எதிர்கொண்டு வரும் நிலையில், தன்னிடம் 10 யானை தந்தங்களும் 13 தந்தச் சிலைகளும் இருப்பதாக அவர் கேரள வனத்துறையிடம் அறிவித்துள்ளார்.

மலையாள சூப்பர் ஸ்டார்களில் நடிகர் மோகன் லாலும் ஒருவராக உள்ளார். இந்த நிலையில், 2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவரது வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடத்தினர். அப்போது, அவரது வீட்டில் நான்கு யானை தந்தங்களைக் கைப்பற்றிய வருமானவரித் துறையினர், அந்த தந்தங்களை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். மேலும் சட்டவிரோதமாக அவர் தந்தங்கள் வைத்திருந்தது தொடர்பாக அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. தன் வீட்டில் கைப்பற்றப்பட்ட யானை தந்தங்களை மீண்டும் ஒப்படைக்குமாறு அப்போதைய கேரள வனத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணனிடம் மோகன்லால் கோரிக்கை வைத்தார். இதையடுத்து சட்டத்தில் திருத்தம் செய்யப்பட் மோகன்லாலுக்கு 2015ஆம் ஆண்டு யானை தந்தம் வைத்துக்கொள்வதற்கு கேரள அரசால் உரிமம் வழங்கப்பட்டது. தந்தங்களும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன. பின்னர், மாநில அரசு அவர் மீதான வழக்கை வாபஸ் பெற முயன்றபோது பெரும்பாவூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அந்த முடிவை நிராகரித்தது. கீழ்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மோகன்லால் தரப்பில், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

mohanlal

நடிகர் மோகன்லால் யானை தந்தங்களை வைத்துக்கொள்ள மாநில அரசால் வழங்கப்பட்ட உரிமம் சட்டப்பூர்வமானது அல்ல என கூறி அதை கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், மாநிலத்தின் வனவிலங்கு பொதுமன்னிப்புத் திட்டத்தின்கீழ், தன்னிடம் 10 யானைத் தந்தங்களும் 13 தந்தச் சிலைகளும் இருப்பதாக அவர் கேரள வனத்துறையிடம் அறிவித்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தனிநபர்கள் தங்கள் வசம் உள்ள வனவிலங்குப் பொருட்களைத் தாமாக முன்வந்து வெளியிட அனுமதிக்கும், துறையின் தற்போதைய பொதுமன்னிப்புத் திட்டத்தின் கீழ் நடிகர் இந்த அறிவிப்பைச் சமர்ப்பித்ததாக மலையாற்றூர் கோட்ட வன அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக நான்கு யானைத் தந்தங்களை அறிவித்திருந்த மோகன்லால், தற்போது மேலும் ஆறு தந்தங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

mohanlal

அதிகாரிகளின் கூற்றுப்படி, புதிதாக அறிவிக்கப்பட்ட பொருட்களில், கிருஷ்ணர், ராமர் மற்றும் திருப்பதி பாலாஜி போன்ற தெய்வங்களைச் சித்தரிக்கும் 13 தந்தச் சிலைகள் அடங்கும். இவற்றின் மொத்த எடை சுமார் 46 கிலோ ஆகும். இவை, பரம்பரைச் சொத்தாக வந்தவை அல்லது பரிசாகப் பெறப்பட்டவை என்று மோகன்லால் கூறி வரும் நிலையில், அதன் உண்மைத்தன்மை மற்றும் தோற்றத்தைச் சரிபார்க்க, அவற்றுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமாக நான்கு யானைத் தந்தங்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் வனவிலங்கு வழக்கு ஒன்றில் மோகன்லால் விசாரணையை எதிர்கொண்டு வரும் வேளையில், அவர் 6 தந்தங்கள் வைத்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.