இந்தியா

கேரளா: பசுக்களை கொன்று மக்களை அச்சுறுத்திய புலி – வனத் துறையினரின் கூண்டில் சிக்கியது

webteam

வயநாட்டில் ஒரு மாதத்திற்கும் மேலாக மக்களை அச்சுறுத்தி வந்த W-43 புலி, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள சீரால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சுற்றித்திரிந்த புலி W-43 என வனத் துறையினரால் அடையாளம் காணப்பட்டது. இந்த புலி 9 பசு மாடுகளை தாக்கிக் கொன்றதோடு 4 பசு மாடுகளை தாக்கி படுகாயப்படுத்தியது. இதனால் ஊர் மக்கள் கடும் அச்சத்தில் இருந்தனர்.; புலியை பிடிக்கக் கோரி தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், புலியை பிடிப்பதற்காக 150-க்கும் மேற்பட்ட வனத் துறையினர் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக கடும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த பணிக்காக கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் பலூர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் புலி சிக்கியது. கூண்டில் சிக்கிய புலி W-43 என கேரளா வனத்துறை உறுதி செய்திருக்கிறது.

இதையடுத்து புலியை, தற்சமயம் வனத் துறையினர் சுல்தான் பத்தேரியில் உள்ள வன விலங்குகள் மீட்பு மற்றும் சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு வைத்து அதற்கு சிகிச்சை அளித்த பின்பு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.