இந்தியா

விதிகளை மீறினால் தளர்வுகள் ரத்து - எச்சரிக்கை விடுத்த கெஜ்ரிவால்

விதிகளை மீறினால் தளர்வுகள் ரத்து - எச்சரிக்கை விடுத்த கெஜ்ரிவால்

webteam

அரசு உத்தரவுகளை கடைபிடிக்காவிட்டால் தளர்வுகள் திரும்ப பெறப்படும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 41 நாட்கள் ஆன நிலையில் மத்திய அரசு சில தளர்வுகளை வழங்க அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் டெல்லியில் மதுக்கடைகளை திறக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் மதுபானம் மீது 70 விழுக்காடு கொரோனா சிறப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது எனவும் சில்லறை கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டிலின் அதிகபட்சவிலை மீது இந்த வரி விதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ள டெல்லி அரசு, இன்று முதல் வரி உயர்வு அமலுக்கு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

டெல்லியில் 150 மதுக்கடைகள் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. 40 நாட்களுக்கு பிறகு கடைகள் திறக்கப்பட்டதால், மதுபிரியர்கள் கடைகள் முன்பு குவிந்தனர். முகக் கவசங்கள் அணியாமலும் தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும் நூற்றுக்கணக்கானோர் வீதிகளில் குவிந்ததால் கரோல் பாக் திரிலோக்புரி, முனிர்கா உள்ளிட்ட பல இடங்களில் கடைகள் மூடப்பட்டன.

இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கட்டுப்பாடுகளை மக்கள் கடைபிடிக்காவிடில், தளர்வுகள் திரும்பப் பெறப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “டெல்லியில் சில கடைகளில் குழப்பம் காணப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. எந்தவொரு பகுதியிலிருந்தும் சமூக விலகல் மற்றும் பிற விதிமுறைகளை மீறுவது பற்றி நாம் அறிந்தால், அந்த பகுதிக்கு சீல் வைத்து அங்கு கொடுக்கப்பட்ட தளர்வுகளை ரத்து செய்ய நேரிடும். இதற்கு கடை உரிமையாளர்கள் பொறுப்பேற்க வேண்டும். ஒரு கடைக்கு வெளியே சமூக விலகல் விதிமுறைகள் மீறப்பட்டால், கடை மூடப்படும்,” எனத் தெரிவித்தார்.