BRS KAVITHA PT WEB
இந்தியா

"பாஜக கூட்டணியை நோக்கி நகரும் பிஆர்எஸ்" - கவிதா குற்றச்சாட்டு

பாஜகவுடன் இணையும் பாதையில் செல்கிறது பிஆர்எஸ் என தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா தெரிவித்துள்ளார். கட்சியிலிருந்து விலகிய பிறகு, முதல் முறையாக அவர் பேட்டி அளித்துள்ளார்.

PT WEB

பிஆர்எஸ் கட்சியின் தலைவரும், தந்தையுமான சந்திரசேகர ராவ், பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவரும், தன்னுடைய சகோதரருமான கே.டி.ராமராவ் இருவருமே தன்னுடன் தொடர்பில் இல்லை என்றும், தன்னுடைய தாயாருடன் மட்டுமே பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் கவிதா கூறியிருக்கிறார்.

தெலங்கானாவை இரு முறை ஆட்சி செய்த கட்சி; இன்றைக்கும் பிரதான எதிர்க்கட்சி பிஆர்எஸ். கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் கட்சியிலிருந்து விலகிய கவிதா அதற்குபின் முதல் முறையாக மௌனம் கலைத்திருக்கிறார். ‘இந்தியன்எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “மகனா, மகளா என்று வரும்போது, மகனுக்கு முன்னுரிமை அளிப்பதே இந்திய நாட்டின் உள்ள எந்த குடும்பத்திலும் வழக்கமாக இருக்கிறது என்றும் தன்னுடைய குடும்பமும் இதிலிருந்து வேறுபட்டதல்ல” என்றும் கூறி தன்னுடைய சகோதரருடனான வேறுபாடே கட்சிலிருந்து வெளியேறும் நிலைக்கான காரணம் என்பதை மறைமுகமாக சாடியிருக்கிறார் கவிதா.

நிச்சயமாக தீவிர அரசியலில் ஈடுபடுவேன்” என்று சொல்லியிருக்கும் கவிதா, அதேசமயம் ராஜசேகரரெட்டியின் மகள் சர்மிளா காங்கிரஸில் சேர்ந்தது போன்று வேறு ஒரு கட்சியில் சேரும் எண்ணம் இல்லை” என்று தெரிவித்திருக்கிறார். பாஜகவுடன் பிஆர்எஸ்ஸை இணைக்க முயற்சிகள் நடப்பதாக தான் முன்பு கூறியிருந்த குற்றச்சாட்டை இந்தப் பேட்டியில் மீண்டும் அழுத்திக் கூறிருக்கிறார் கவிதா. “கிட்டத்தட்ட 70 லட்சம் தொண்டர்களைக் கொண்ட பிஆர்எஸ் கட்சியை பாஜகவுடன் இணைக்கக் கூடாது என்று நான் முன்பு வலியுறுத்தினேன். ஆனால், அவர்கள் இப்போது அந்த வழியில்தான் பயணப்பட்டுக் கொண்டிருப்பதுபோல் தெரிகிறது என்று தன் தந்தையையும் சகோதரரையும் மறைமுகமாகச் சாடிய கவிதா, வரவிருக்கும் தேர்தலின்போது முழுப் படத்தையும் நாம் பார்க்கலாம் என்று சொல்லியிருக்கிறார்!