இந்தியா

குழந்தைகளில் ஏது மதம் : ஆசிஃபாவின் தந்தை

webteam

குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை என்ற அவசரச் சட்டத்தால் ஆசிபாவுக்கு நீதி கிடைக்கும் என நம்புவதாக சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.

12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.இந்த அறிவிப்பு கத்துவாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 8வயது சிறுமியின் தந்தை வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர் "12வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் அவசரச் சட்டத்தை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் எனது குழந்தைக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன். நாங்கள் மிகவும் சாதாரணமானவர்கள். குழந்தைகள் குழந்தைகள் தான்.இதில் இந்து , முஸ்லீம் என்ற வேறுபாடு எல்லாம் கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டார். கடந்த ஜனவரி மாதம் சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் உள்ளூர் காவல்துறையினர் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு ஆதாரங்களை அழிக்க முயற்சித்துள்ளனர். இவ்விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் இவ்விவகாரத்தில் முக்கிய நபராக கருதப்படும் ராம் என்பவரை விடுவிக்க கோரி மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடைப்பெற்றது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவிடாமல் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து காஷ்மீர் பார் கவுன்சிலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தற்போது இந்த வழக்கை காஷ்மீர் சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.