இந்தியா

காஷ்மீர் சிறுமி கொலை, பாக். கைக்கூலிகள் செயல் - ம.பி பாஜக தலைவர்

webteam

காஷ்மீர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதற்கு காரணம் பாகிஸ்தான் கைக்கூலிகள் தான் என மத்தியப் பிரதேச பாஜக தலைவர் நந்தகுமார் சிங் சவுகான் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் ஆசிஃபா என்ற 8 ‌வயது சிறுமி கடந்த ஜனவரி 10ஆம் தேதி காணாமல் போனாள். ஒரு வாரத்திற்குப்பிறகு ராஸன்னா வனப்பகுதியில் இருந்து சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சிறுமியை ஒரு சிறுவன் உட்பட 8 பேர் சேர்ந்து வழிபாட்டுத்தலம் ஒன்றில், மறைத்து வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக டெல்லி தடயவியல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், 18 வயது நிரம்பாத அந்த சிறுவன், சிறுமியை அடித்துக்கொலை செய்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு இந்திய அளவில் கண்டனக் குரல் கள் எழுந்து வருகின்றன. பலரும் சமூக வலைத்தளங்களில் ஆசிஃபாக்கு நீதி வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்தியப் பிரதேச பாஜக தலைவர் நந்தகுமார் சிங் சவுகான், “காஷ்மீர் சிறுமியை பாலியல் கொடுமை செய்தவர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கூறியிருந்தால், அவர்கள் பாகிஸ்தானின் கைக்கூலிகள் தான். அந்தச் செயலுக்குப் பின்னால் பாகிஸ்தான் ஏஜெண்டுகள் உள்ளனர். காஷ்மீரில் ஒரு சதவிகிதம் இந்துக்கள் மட்டுமே உள்ளனர். அவர்கள் அங்கு வாய் திறக்க முடியாமல் உள்ளனர். பின்னர் எப்படி அவர்கள் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட முடியும். எப்படியிருந்தாலும் இந்த சம்பவம் மனிதநேயத்தின் மீது படிந்த கறை’ என்று கூறியுள்ளார்.