இந்தியா

பிரதமரின் ஆன்மிக குரு என்று கூறி மோசடி: கதக் டான்சர் கைது!

webteam

பிரதமர் மோடியின் ஆன்மிக குரு என்று கூறி விஐபி சலுகைகளை பெற்று வந்த கதக் டான்சரை போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லியை சேர்ந்தவர் புல்கித் மகராஜ் என்கிற புல்கித் மிஸ்ரா. கதக் நடனக்கலைஞரான இவர், டெல்லியில் உள்ள ஷாலிமர் கார்டனில் கதக் நடனப்பள்ளியை நடத்தி வருகிறார். இவர் பிரதமரின் ஆன்மிக குரு என்று பொய்யாகக் கூறி வந்துள்ளார். இந்நிலையில் உத்தரபிரதேச கலை மற்றும் கலாசார செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தான் பிரதமரின் ஆன்மிக குரு என்றும் தான் அங்கு வர இருப்பதாக வும் விஐபிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு வசதிகளை தனக்கும் தரும்படி குறிப்பிட்டிருந்தார். பிரதமர் மோடியுடன் இருப்பது போன்ற புகைப் படத்தையும் அனுப்பி இருந்தார். இது உயரதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. 

இது தொடர்பாக டெல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து புல்கித் மிஸ்ராவை போலீசார் விசாரித்தனர். விசாரணை யில், தான் மோடியின் ஆன்மீக குரு என்றும் அவர் மத்திய அமைச்சர்கள், ஜனாதிபதியுடன் இருக்கும் போட்டோக்களை அதிகாரிகளிடம் காண்பித்தும் ஏமாற்றியிருப்பது தெரியவந்தது. அவர் பல்வேறு மாநிலங்களுக்குச் செல்லும்போது, தனக்கு விஐபி அந்தஸ்து உள்ளிட்ட அரசு சலுகைகள் வேண்டும் என்று மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு ஃபேக்ஸ் அனுப்பியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.