இந்தியா

100% தடுப்பூசி எடுத்துக்கொண்ட இந்தியாவின் முதல் கிராமம் - காஷ்மீரின் 'வெயான்' சாதனை

100% தடுப்பூசி எடுத்துக்கொண்ட இந்தியாவின் முதல் கிராமம் - காஷ்மீரின் 'வெயான்' சாதனை

நிவேதா ஜெகராஜா

100% தடுப்பூசி எடுத்துக்கொண்ட இந்தியாவின் முதல் கிராமம் என்ற பெருமைக்கு சொந்தமாகி இருக்கிறது காஷ்மீரில் உள்ள ஒரு கிராமம். இதற்கு மருத்துவர்கள் எடுத்துக்கொண்ட சிரமம் கவனம்கொள்ள வைக்கிறது.

`கொரோனா நமது மிகப்பெரிய எதிரி; அதை வீழ்த்த நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசிதான்' என்று நேற்று மக்களிடம் உரையாற்றிய போதுகூட பிரதமர் மோடி வற்புறுத்தினார். அவர் மட்டுமல்ல, உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும், மருத்துவ நிபுணர்களும் இதனை வற்புறுத்தி வருகின்றனர். இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. பற்றாக்குறைகள் இருந்தாலும் அதனை சரி செய்து தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமெடுத்துள்ளன.

இந்த நிலையில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்திய, இந்தியாவின் முதல் கிராமம் என்ற பெருமையை பெற்றுள்ளது காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் மலைக்கிராமமான வெயான். கடந்த இரண்டு வாரங்களில் இரண்டாம் முறையாக குரேஸ் பிராந்தியத்தின் மேல் உள்ள இந்த கிராமத்துக்குச் செல்ல 11 கிலோமீட்டர் தூரத்திற்கு மலையேறி சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்குள்ள ஒவ்வொரு பெரியவர்களுக்கும், இதேபோல் 18 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொரு நபருக்கும் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்.

இந்தப் பகுதியில் அக்டோபருக்குப் பிறகு காலநிலை மாறும். அப்போது மற்றபகுதிகளில் இந்த கிராமம் துண்டிக்கப்படும் நிலைக்குச் செல்லும். சாலைகள், மின்சாரம் மற்றும் மொபைல் நெட்வொர்க் இல்லாத இந்த கிராமத்தில் வசிப்பவர்கள், பெரும்பாலானோர் நாடோடிகள். அதாவது, கோடை காலத்தில் தங்கள் கால்நடைகளை மலைகளில் புல்வெளிகளுக்கு அழைத்துச் சென்று மேய்ச்சல் செல்லும் இக்கிராம மக்கள், இலையுதிர்காலத்தில் மட்டுமே திரும்பி வருகிறார்கள். அக்டோபருக்கு முன்பு அவர்களுக்கு தடுப்பூசி போட முடியாது என்பதால் தற்போது விரைவாக தடுப்பூசி செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது.

பந்திபோராவின் மருத்துவ அதிகாரி, டாக்டர் மஸ்ரத் இக்பால் தலைமையிலான குழு இக்கிராமத்தைச் சேர்ந்த அனைவருக்கும் 100% தடுப்பூசி போட்டு விட்டதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசியுள்ள இக்பால், "மருத்துவ அதிகாரிகள் கொஞ்சம் காத்திருந்தால் குரேஸ் பிராந்தியத்தின் மேல் பகுதிகளில் வசிப்பவர்களைக் கண்டுபிடிப்பது அவர்களுக்கு கடினமாக இருந்திருக்கும். அக்டோபருக்கு பிறகு அவர்களுக்கு தடுப்பூசி போட முடியாது. இரண்டாவது டோஸ் 12 வாரங்களுக்குப் பிறகு வழங்கப்படும். இரண்டாவது டோஸ் வழங்குவதற்காக அவர்கள் எங்கு செல்வார்கள், அவர்கள் வசிக்கும் இடங்களைப் பற்றிய விவரங்களை பற்றி கேட்டு வைத்துள்ளோம்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, நாங்கள் அங்கு ஒரு குழுவை அனுப்பியபோது, கிராமத் தலைவர் உட்பட ஆறு பேர் மட்டுமே தடுப்பூசி எடுத்துக்கொள்ள முன்வந்தனர். எனினும், கிராமத்தின் தலைவரான லால் பட், கிராமத்தின் மீதமுள்ள பெரியவர்களுக்கு தடுப்பூசி போட ஊக்கமாக இருந்தார். எந்தவொரு பக்கவிளைவும் இல்லாமல், தடுப்பூசி எடுப்பதை மற்ற குடியிருப்பாளர்கள் பார்த்தபோது, அவர்களும் தங்கள் தயக்கத்தை விடுத்து தடுப்பூசி எடுத்துக்கொண்டனர். ஒரு மருத்துவர் தலைமையிலான 10 பேர் கொண்ட குழு, தடுப்பூசி செலுத்துவதற்காக கிராமத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

அதன்படி, இரண்டு நாட்களில் 362 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. கிராமத்தில் வசிப்பவர்கள் நாடோடிகள் என்பதால் முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கு தற்போது விரைவாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. வெயனைப் போலவே, 18-க்கும் மேற்பட்ட 100% மக்கள் தடுப்பூசி போடப்படும் பல கிராமங்களை மருத்துவத்துறை பட்டியலிட்டுள்ளது. காஷ்மீரில் ஏற்கனவே 35 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இது ஒரு நல்ல சராசரி, மேலும் வரும் நாட்களில் இதை மேலும் மேம்படுத்த முயற்சிப்போம்" என்று தெரிவித்துள்ளார்.