தாய் கண்ணீர் விட்டு அழுத வீடியோவை கண்டு மனம் மாறிய கால்பந்து வீரர், தீவிரவாத இயக்கத்தை விட்டுவிட்டு போலீசில் சரண் அடைந்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்நாக் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் கால்பந்து அணியில் இடம்பெற்றிருந்த வீரர் மஜீத் கான். இவரது நெருங்கிய நண்பர் கடந்த சில தினங்களுக்கு முன் என்கவுன்டரால் கொலை செய்யப்பட்டார். இதனால் விரக்தி அடைந்த மஜீத்கான் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பில் கடந்த வாரம் சேர்ந்தார். இதனால் மஜீத்கானின் குடும்பமே சோகத்தில் மூழ்கியது.
இதனையடுத்து மஜீத் கானின் அம்மா பேசிய உருக்கமான வீடியோ அவரை மீண்டும் வீட்டிற்கே அழைத்து வந்துள்ளது. "நான் உனக்காகவே காத்திருக்கிறேன். நீ மீண்டும் வீட்டிற்கே வர வேண்டும் மகனே. முன்புபோல் கால்பந்து விளையாட செல்ல வேண்டும்" உள்ளிட்ட உருக்கமான வார்த்தைகளால் அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. ஒரு தாயின் கண்ணீர் வீடியோவை சமூக வலைதளங்களில் அனைவரும் சோகத்துடன் ஷேர் செய்தனர். இந்நிலையில் தீவிரவாத இயக்கத்தை விட்டு விலகி போலீசாரிடம் மஜீத்கான் சரண் அடைந்துள்ளார். இந்த தகவலை போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் உறுதிபடுத்தியுள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.