இந்தியா

கார்த்தி சிதம்பரத்தின் ரூ.50 கோடி மதிப்பிலான சொத்து முடக்கம்

கார்த்தி சிதம்பரத்தின் ரூ.50 கோடி மதிப்பிலான சொத்து முடக்கம்

webteam

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம்பத்தின் ரூ.50 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த இந்திராணி முகர்ஜி மற்றும் கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் ‘ஐஎன்எக்ஸ் மீடியா’ என்ற தொலைக்காட்சி நிறுவனத்தை நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்திற்கு விதிமுறைகளை மீறி ரூ.305 கோடிக்கு தனது பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றதாகவும் இதற்கு கார்த்தி சிதம்பரம் உதவி செய்ததாகவும் கூறப்படுகிறது. இதற்காக கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. புகாரை அடுத்து கார்த்தி சிதம்பரம் வீட்டில் அதிரடி சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள் அவர்  மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். அதன்படி பிப்ரவரி மாதம் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமின் பெற்ற கார்த்தி விடுதலையானார். 

இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்தின் ரூ.50 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை முடக்கி  அமலாக்கத்துறை தற்போது  நடவடிக்கை எடுத்துள்ளது.  இந்தியாவில் ஊட்டி, டெல்லி ஆகிய இடங்களில் உள்ள நிலம், வீடுகள் உள்ளிட்ட அசையா சொத்துகளும் வெளிநாட்டு சொத்துகளும் இதில் அடங்கும் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஏற்கெனவே சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது அமலாக்கத்துறையும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.