கார்த்தியாயினி அம்மா
கார்த்தியாயினி அம்மா pt web
இந்தியா

கேரளா: கல்விக்கு வயது தடையில்லை என உலகுக்கு உணர்த்திய கார்த்தியாயினி பாட்டி 101 வயதில் காலமானார்!

Angeshwar G

கேரளாவின் ஆலப்புழா பகுதியில் வசித்து வந்தவர் கார்த்தியாயினி அம்மா. இவர் தனது 96 ஆவது வயதில் முதியவர்கள் கல்வியறிவு பெறும் திட்டமான அக்ஷரா லக்ஷம் கீழ் படித்து 4 ஆம் வகுப்பு தேர்வில் 98% மதிப்பெண்களுடன் மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.

100 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட இந்தத் தேர்வில், வாசிப்பிற்கு 30 மதிப்பெண்களும், மலையாளத்தில் எழுதுவதற்கு 40 மதிப்பெண்களும், கணக்கு பாடத்திற்கு 30 மதிப்பெண்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதில் வாசிப்பு பகுதியில் 30/30 என கார்த்தியாயினி அம்மாள் முழுமதிப்பெண் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வியின் முக்கியத்துவம் தொடர்பாக காலம்காலமாக பேசிவந்த சூழலில் 96 வயதில் 4 ஆம் வகுப்பு தேர்வு எழுதி அதில் முதலிடமும் பிடித்தது தேசிய அளவில் பேசப்பட்டது. பல்வேறு தரப்புகளில் கார்த்தியாயினி அம்மாவிற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தன. பிரதமர் மோடியும் கார்த்தியாயினி அம்மாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினத்தன்று மத்திய அரசின் நாரி சக்தி புரஸ்கார் விருதும் வழங்கப்பட்டது.

தனது 12 வயதில் பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்ட கார்த்தியாயினி அம்மா அருகில் இருந்துள்ள கோவிலில் பணி புரிந்து வந்துள்ளார். 18 வயதில் திருமணம் செய்து கொண்ட அவருக்கு 6 குழந்தைகள் பிறந்தன. கடைசி குழந்தை பிறந்து 28 நாட்கள் ஆன நிலையில் அவரது கணவர் இறந்துவிட குடும்பத்தின் ஒரே ஆதாரமாக கார்த்தியாயினி அம்மா மாறினார். கடந்த 2022 ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.

தற்போது 101 வயதாகும் கார்த்தியாயினி அம்மா வயது மூப்பு காரணமாக ஆலப்புழாவின் சேப்பாட்டில் உள்ள முட்டம் என்ற தனது சொந்த ஊரில் காலமானார். பலரும் கார்த்தியாயினி அம்மாவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கேரள முதல்வர் பினராயி விஜயனும் கார்த்தியாயினி அம்மாவின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இறுதிச் சடங்கு வியாழன் அன்று காலை 11 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.