Jagadish Shettar
Jagadish Shettar Jagadish Shettar twitter page
இந்தியா

கொதிக்கும் கர்நாடக தேர்தல் களம்.... ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸில் இணைய இதுதான் காரணமா?

Prakash J

கர்நாடகா மாநிலத்தில், 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு, அடுத்த மாதம் (மே 2023) 10ஆம் தேதி, ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 13ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து, அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ், பாஜக, ஜேடிஎஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், பாஜக இரண்டு கட்டங்களாக 212 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. அந்தப்பட்டியலில் தற்போதுள்ள 18 எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், அக்கட்சியிலிருந்து விலகிய சிலர் இதர கட்சிகளில் இணைந்து வருகின்றனர். இன்னும் சிலர் சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்து வருகின்றனர்.

அப்படி முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரும் பாஜகவிலிருந்து விலகி, இன்று காங்கிரஸில் இணைந்துள்ளார்.

இது, பாஜகவுக்கு பெரும் தலைவலியை உண்டாக்கி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஜெகதீஷ் ஷெட்டர், உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் போட்டியிட மீண்டும் சீட் கேட்டதாகவும், அதற்கு தலைமை மறுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Jagadish Shettar

இதையடுத்தே, அக்கட்சியிலிருந்து அவர் விலகியதாகக் கூறப்படுகிறது. தவிர, அவர் காங்கிரஸில் இணைந்திருப்பது பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது. இதனால், கடந்த இரண்டு நாட்களாக கர்நாடக அரசியல் வட்டாரத்தில் ஜெகதீஷ் பற்றிய பேச்சுதான் கோடை வெயிலைத் தாண்டி கொதிப்பதாகக் கூறப்படுகிறது.

காங்கிரஸில் இணைந்தது குறித்து ஜெகதீஷ் ஷெட்டர், “பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்ததைக் கண்டு பலரும் வியப்படைந்துள்ளனர். பாஜக, எனக்கு ஒவ்வொரு பதவியையும் அளித்துள்ளது. கட்சித் தொண்டனாக இருந்த நான் கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து உழைத்தேன். மூத்த தலைவர் என்பதால் சீட் கிடைக்கும் என நினைத்தேன். கிடைக்காமல் போனது தெரிந்ததும் அதிர்ச்சியடைந்தேன். யாரும் என்னுடன் பேசவில்லை, என்னை சமாதானப்படுத்தவும் முயலவில்லை.

Jagadish Shettar

எனக்கு என்ன பதவி கொடுப்பது என்றுகூட உறுதியளிக்கவில்லை. தற்போது முழு மனதுடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளேன். டி.கே.சிவக்குமார், சித்தராமையா, ரந்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் என்னைத் தொடர்பு கொண்டனர். அவர்கள் என்னை அழைத்ததும், யோசிக்காமல் காங்கிரஸுக்கு வந்துவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸில் ஜெகதீஷ் ஷெட்டர் இணைந்தது குறித்து முன்னாள் முதல்வர் சித்தராமையா, “முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை எங்கள் கட்சிக்கு வரவேற்கிறேன். பாஜக-வில் நேர்மையான கட்சித் தொண்டராக இருந்த அவர், தனிப்பட்ட லாபத்திற்காக அல்லாமல் கட்சிக்காக உழைத்தார். பாஜகவில் ஜெகதீஷ் ஷெட்டர் நடத்தப்பட்ட விதம், எந்தக் கட்சியிலும் யாருக்கும் நடக்கக்கூடாது.

சித்தராமையா

அவர் இப்போது பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவரது சமூகம் மற்றும் ஆதரவாளர்கள் பாஜகவால் அவமதிக்கப்பட்டுள்ளனர். ஜெகதீஷ் ஷெட்டர் எங்களுடன் இணைந்த பிறகு, நாங்கள் 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம். அவர் இணைவது கட்சிக்கு உத்வேகத்தை அளிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் ஜெகதீஷ் ஷெட்டரின் காங்கிரஸ் இணைவு குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, “வீரேந்திர பாட்டீல், பங்காரப்பா மற்றும் தேவராஜ் அர்ஸ் ஆகியோரை வெளியேற்றிய கட்சிக்கு அவர் சென்றிருக்கிறார். முதலில் கவுரவம் கிடைக்கும். பின்னர் தேர்தல் முடிந்தபின்பு, அவமதிப்புதான் கிடைக்கும். ஜெகதீஷ் ஷெட்டரை பயன்படுத்திவிட்டு, தூக்கி எறிந்துவிடுவார்கள்” என்றார்.

பசவராஜ் பொம்மை

இதற்குப் பதிலளித்த கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், “ஜெகதீஷ் ஷெட்டர் எந்த நிபந்தனையும் எங்களிடம் விதிக்கவில்லை. நாங்களும் அவருக்கு எந்த சலுகையும் அளிப்பதாகக் கூறவில்லை. காங்கிரஸ் கட்சியின் கொள்கை மற்றும் மாண்புகளை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது மட்டுமே நாங்கள் விரும்புகிறோம். நாட்டை ஒற்றுமையாக வைத்திருக்க விரும்புகிறோம், அதை காங்கிரசால் மட்டுமே செய்ய முடியும்” என்றார்.

பாஜகவில் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் ஓரங்கட்டுப்படுவதாகச் சொல்லப்படுகிறது. அந்த வகையில் அதே சமூககத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் ஷெட்டரும் ஓரங்கட்டப்பட்டிருக்கிறார் என்றும் ஏற்கெனவே எடியூரப்பாவும் ஓரங்கட்டப்பட்டுள்ளார் என்றும் அரசியல் வல்லுநர்கள் விமர்சிக்கின்றனர். இதையடுத்துத்தான் அவர் காங்கிரஸ் இணைவதற்கு முடிவை எடுத்துள்ளார் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கியமாய், அவர் காங்கிரஸில் இணைந்ததற்கு அவருடைய மகனின் திருமணம் ஒரு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. ஏனெனில் அவர் மகனின் திருமணம், அதே சமூகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவரின் உறவுவழியில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் காங்கிரஸின் நெருக்கம் ஜெகதீஷுக்குள் அதிகமானதாகக் கூறப்படுகிறது.