இந்தியா

“குழந்தைகள் படிப்புதான் முக்கியம்”- டிவி வாங்க தாலியை விற்ற தாய்..!

“குழந்தைகள் படிப்புதான் முக்கியம்”- டிவி வாங்க தாலியை விற்ற தாய்..!

webteam

குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக தனது தாலியை விற்று  டிவி வாங்கிய தாயின் செயல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் குழந்தைகளுக்கான பாடங்களை ஆன் வழியாக கொண்டு செல்ல அனைத்துப் பள்ளிகளும் முயற்சி செய்து வருகின்றன. இதில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு டிவி வழியாக பாடங்களைக் கற்பிக்க மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. அந்த வகையில் கர்நாடக அரசும் தொலைக்காட்சி வழியாக குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் பாட எடுக்கும் நடைமுறைக்கு ஒப்புதல் அளித்தது. ஆனால் இதில் வீட்டில் டிவி இல்லாத ஏழை மாணவர்கள் பலர் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் அந்நிலைமை தனது குழந்தைகளுக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக தாய் ஒருவர் தனது தாலியை விற்று தனது குழந்தைகளுக்கு  டிவி வாங்கியுள்ளார்.

கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தில் உள்ள ராடர் நாகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கஸ்தூரி. இவரது கணவர் ஒரு தினசரிக் கூலி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் பள்ளியிலிருந்து கஸ்தூரியைத் தொடர்பு கொண்ட ஆசிரியர்கள் டிவி வழியாக குழந்தைகளுக்கு  பாடம் கற்பிக்கப்படும் என்று கூறியுள்ளனர். இதனைக் கேட்ட கஸ்தூரி தனது தாலியை 20,000 ரூபாய்க்கு விற்று அதில் 14,000 ரூபாய்க்கு டிவியை வாங்கியுள்ளார்.

இது குறித்து கஸ்தூரி கூறும் போது “ எனது குழந்தைகளை பாடம் கற்பதற்காக உறவினர்கள் வீட்டுக்கு அனுப்ப எனக்கு விருப்பமில்லை. இந்த டிவி அவர்களுக்கு அத்தியாவசமான ஒன்று. எனக்கு இதைத் தவிர வேறு எந்த வழியும் தெரியவில்லை. எனது கணவருக்கும் தற்போது வேலை இல்லை. தாலியை விற்றதில் 20,000 ரூபாய் கிடைத்தது. அதில் 14,000 ரூபாய்க்கு டிவி வாங்கி விட்டேன்

கஸ்தூரியின் மகள் சுரேகா கூறும் போது “ எங்கள் வீட்டில் பல மாதங்களாக டிவி இல்லாமல் இருந்தது. தற்போது எங்கள் வீட்டில் டிவி வந்து விட்டது”  என்றார்.