ஐபிஎல் சூதாட்டம்
ஐபிஎல் சூதாட்டம் முகநூல்
இந்தியா

கர்நாடகா | ஐபிஎல் சூதாட்டத்தில் பணத்தை இழந்த கணவர்; விபரீத முடிவெடுத்த மனைவி...

ஜெனிட்டா ரோஸ்லின்

கர்நாடகா மாநிலம், சித்ரதுர்காவை சேர்ந்தவர் தர்ஷன் பாபு. இவர் மனைவி ரஞ்சிதா. தர்ஷன் பாபு சொட்டு நீர்ப் பாசனத் துறையில் உதவி பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்த இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

ரஞ்சிதா

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட தர்ஷன் பாபு, கடந்த 2021 - 2023 ஆண்டு காலகட்டத்தில் (கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக) கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறார். பணம் இல்லாத நேரத்தில்கூட கடன்பெற்று சூதாட்டத்தில் செலுத்தி வந்துள்ளார் என சொல்லப்படுகிறது. இதனால் ரூ.1.50 கோடிக்கு மேல் கடனாளி ஆகியுள்ளார். தான் கடன் வாங்கிய பணத்தில் 1 கோடி வரை திருப்பி செலுத்தியுள்ளார். இருப்பினும் மீதம் ரூ.84 லட்சம் கடன் தொகையை திருப்பி தர வேண்டி இருந்துள்ளது. இதற்காக கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து பணத்தை திருப்பிக் கேட்டு தர்ஷன் பாபு மற்றும் அவர் குடும்பத்தினருக்கு அளித்து வந்துள்ளனர்.

இதனால் விரக்தியடைந்த தர்ஷன் பாபுவின் மனைவி ரஞ்சிதா, கடந்த 18 ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளர்.

இதுகுறித்து ரஞ்சிதாவின் தந்தை வெங்கடேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் தெரிவிக்கையில், “எனது மகளை தொடர்ந்து பணம் கேட்டு துன்புறுத்தியதால், என் மகள் மன உளைச்சலைக்கு ஆளாகி இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

எனது மருமகன் தர்ஷனுக்கு இதில் நாட்டமே இல்லை. ஆனால் அவரிடம்,’ நிச்சயம் பணம் சம்பாதித்து விடலாம்’ என ஆசைகாட்டி அவரிடம் போலியான காசோலையை பெற்றுக் கொண்டு அவரை பந்தயத்தில் ஈடுபடுத்தியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பணம் கொடுத்ததாகக் கூறப்படும் 13 பேரின் பெயரையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து இது குறித்த தீவிர விசாரணையை அப்பகுதி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பு:

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுவடுவதற்கான ஆலோசனைகள் பெற,

நல்வாழ்வித் துறை ஹெல்ப்லைன் - 104

சினேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044- 24640050