கர்நாடக மாநிலம், பெங்களுருவில் தனது கணவர் தன்னைவிட வளர்ப்பு பூனைமேல் அதிக கவனம் செலுத்துவது பொறுக்காமல், கர்நாடக உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார் பெண் ஒருவர். தன் மீது கணவர் அக்கறை கொள்ளாமல் பூனைமீது அக்கறை செலுத்தும்போதெல்லாம் இவர்களுக்குள் சண்டை ஆரம்பித்துள்ளது. அதுமட்டுமின்றி அடிக்கடி அந்த பெண்ணை பூனை பிராண்டிவைப்பதால் சண்டை பூதாகரமாக வெடிக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து அந்தப் பெண் தொடர்ந்த வழக்கில் "இதை வன்கொடுமையாக கருத முடியாது" என நீதிமன்றம் கண்டித்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக பேசிய நீதிபதி, "வரதட்சணை அல்லது வரதட்சணைக் கொடுமையின் பேரில் கணவனால் நடத்தப்படும் தாக்குதல்தான் குற்றமாகும். வீட்டுப் பூனை மற்றும் பூனை மனைவியைத் தாக்குவது எல்லாம் வன்கொடுமை பிரச்னை ஆகாது” என குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர்மீது பதியப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம் 498A பிரிவின்கீழ் பதியப்பட்ட வழக்கிற்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தற்காலிகத் தடை விதித்துள்ளது. தன்மீது அக்கறை கொள்ளாமல் பூனை மீது பாசம் வைத்ததால் பெண் ஒருவர் கணவன் மீது புகார் கொடுத்த சம்பவம் ஒட்டுமொத்த மக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.