இந்தியா

கர்நாடகா: நிற்காமல் சென்ற கார்... விரட்டிப் பிடித்த போலீசார் - கட்டுக்கட்டாக சிக்கிய பணம்

webteam

கர்நாடக மாநிலத்தில் காரில் கடத்திவரப்பட்ட 85 லட்சம் ரூபாய் பணத்தை சினிமா பாணியில் உயிரை பணயம் வைத்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ஆனகல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈட்டுப்பட்டிருந்தனர் அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தினர் ஆனால், போலீசாரை கண்டதும் கார் நிற்காமல் சென்றதால் சந்தேகமடைந்த போலீசார் சினிமா பாணியில் உயிரை பணயம் வைத்து காரை துரத்திச் சென்றனர்.

இதைத் தொடர்ந்து அந்த காரை மடக்கிப் பிடித்த போலீசார் காரை சோதனை செய்தனர். அப்போது அதில், 500, 200, 100, 50 ரூபாய் நோட்டு கட்டுகள் என மொத்தம் 85 லட்சம் ரூபாய் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து காரில் பயணம் செய்த உத்தர கன்னடா மாவட்டம் சித்தாபுரா தாலுகா நிஜூர் கிராமத்தைச் சேர்ந்த பயாஜ்கான் (31), இம்ரான் கான் (27), ஷிமோகா மாவட்டம் சாகர் பகுதியைச் சேர்ந்த சதாம் கான் (23) மற்றும் சையது அமீன் (29) ஆகியோரை கைது செய்து 85 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.