இந்தியா

கர்நாடகாவில் இன்று கிளைமாக்ஸ் : ஏற்கப்படுமா எம்எல்ஏக்களின் ராஜினாமா?  

கர்நாடகாவில் இன்று கிளைமாக்ஸ் : ஏற்கப்படுமா எம்எல்ஏக்களின் ராஜினாமா?  

webteam

கர்நாடகாவில் 13 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ள நிலையில் அதை ஏற்பது குறித்து சபாநாயகர் ரமேஷ் குமார் இன்று பரிசீலிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகாவில் அரசியல் சூழல் நாளுக்கு நாள் அதிரடி திருப்பம் கண்டு வருகிறது. ஆளும் காங்கிரஸ் - மஜத கட்சியை சேர்ந்த 13 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்த நிலையில் அதை ஏற்பது குறித்து சபாநாயகர் ரமேஷ் குமார் இன்று பரிசீலிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக சுயேச்சை எம்எல்ஏக்கள் நாகேஷ், சங்கர் ஆகிய இருவரும் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டு பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தனர். இதனால் ஆளும் கூட்டணியின் பலம் 116 ஆக குறைந்துள்ளது. இது தவிர ராஜினாமா செய்த 13 எம்எல்ஏக்களின் முடிவை சபாநாயகர் ஏற்கும் பட்சத்தில் ஆளும் கூட்டணியின் பலம் 103 ஆக குறையும், 2 சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பாஜகவின் பலம் 107 ஆக அதிகரிக்கும். 

இந்நிலையில் பெரும்பான்மையை இழந்துவிட்ட அரசு பதவி விலக வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. அதே சமயம் 13 எம்எல்ஏக்களின் ராஜினாமாவிற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. இதற்கிடையில் ஆட்சியை காப்பாற்ற காங்கிரசுடன் இணைந்து முதல்வர் குமாரசாமி கடைசி நேர காய்நகர்த்தல்களை மேற்கொண்டுள்ளார். குமாரசாமி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 21 அமைச்சர்களும் பதவி விலகிவிட்டனர். ராஜினாமா செய்த எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி அளிக்க ஏதுவாகவே இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

இந்நிலையில் ராஜினாமா கடிதம் அளித்த எம்எல்ஏக்கள் 13 பேரும் மும்பையில் இருந்து கோவாவிற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த 13 பேரையும் மும்பை பாஜக இளைஞரணி தலைவர் மோகித் பார்த்தியா அழைத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் கர்நாடகாவில் ஆட்சிக் கவிழ்ப்பிற்காக குதிரை பேரம் நடத்த ஆளுநரே துணை போகிறார் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த துணை முதல்வர் பரமேஸ்வரா குற்றஞ்சாட்டியுள்ளார்.