கர்நாடகாவில் விவசாயிகள் பலரின் நிலங்களுக்கு உரிமை கோரி வக்ஃபு வாரியம் நோட்டீஸ் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதற்குப் பதிலளிக்கும் வகையில், பாரதிய கிசான் சங்கம் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் விஸ்வ வொக்கலிகா மகாசமஸ்தான மடத்தின் சீர் குமார சந்திரசேகரநாத சுவாமி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும். வக்ஃபு வாரியம் யாருடைய நிலத்தையும் உரிமை கொண்டாடலாம் என்று கூறப்படுவது பெரிய அநியாயம். யாரோ ஒருவரின் நிலத்தைப் பறிப்பது தர்மம் அல்ல. எனவே, அனைவரும் போராட வேண்டும். விவசாயிகளின் நிலம் தங்களிடம் இருப்பதை உறுதிசெய்யப் போராடுங்கள்” எனத் தெரிவித்த அவர், ”முஸ்லிம்களின் வாக்குரிமையைப் பறிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும்” எனப் பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, சந்திரசேகரநாத சுவாமி மீது சமூக ஆர்வலர் ஒருவர் போலீஸில் புகார் அளித்தாஅர். அதன்பேரில், குமார சந்திரசேகரநாத சுவாமி மீது உப்பர்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. "பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 299 (மத உணர்வுகளை தூண்டும் நோக்கம்)-ன் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, குமார சந்திரசேகரநாத சுவாமி, தனது கருத்துக்கு மன்னிப்பு தெரிவித்துள்ளார். வாய் தவறி அவ்வாறு பேசிவிட்டதாக கூறியுள்ள அவர், "முஸ்லிம்களும் நாட்டின் குடிமக்கள். எனவே, மற்றவர்களைப் போலவே வாக்களிக்கும் உரிமை அவர்களுக்கும் உண்டு" என தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில், வக்ஃப் திருத்த மசோதா தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றக் கூட்டுக்குழு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, இந்த வாரத்திற்குள் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறை, ரயில்வேக்கு அடுத்தபடியாக அதிகமான சொத்துகளை வைத்துள்ளதாகக் கூறப்படும் வக்ஃபு வாரியத்தில் செயல்திறனை மேம்படுத்தவும், வாரியம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதும் அவசியம் என கருதி மத்திய அரசு இந்த மசோதாவைக் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.