rss PT
இந்தியா

RSS பேரணிக்குத் தடை.. கர்நாடகாவில் வலுக்கும் எதிர்ப்பு.. உயர்நீதிமன்றம் உத்தரவு!

கர்நாடகாவில், அரசு சொத்து அல்லது வளாகங்களைப் பயன்படுத்த முற்படும் எந்தவொரு தனியார் அமைப்பு அல்லது குழுவிற்கும் முன் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Prakash J

கர்நாடகாவில், அரசு சொத்து அல்லது வளாகங்களைப் பயன்படுத்த முற்படும் எந்தவொரு தனியார் அமைப்பு அல்லது குழுவிற்கும் முன் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் உள்ள பொது இடங்களில் ஆர்.எஸ்.எஸ் செயல்பாடுகளைத் தடை செய்யக் கோரி பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஐ.டி/பிடி அமைச்சர் பிரியங்க் கார்கே முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். ’ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், பொது இடங்களிலும் தனது 'ஷாகாக்களை' நடத்தி வருவதாகவும் அங்கு கோஷங்கள் எழுப்பப்படுவதாகவும், இதனால் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மனதில் எதிர்மறையான கருத்துகள் விதைக்கப்படுவதாகவும் அந்தக் கடிதத்தில் குற்றஞ்சாட்டியிருந்தார்.

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு

இதைத் தொடர்ந்து, அமைச்சர் பிரியங்க் கார்கேவின் சொந்தத் தொகுதியான சித்தப்பூரில், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்று கூறி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பீம் ஆர்மி ஆகிய இரு இயக்கங்களின் பாதை அணிவகுப்புகளுக்கு அதிகாரிகள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உத்தரவின்படி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பீம் ஆர்மி இரண்டும் ஒரே நாளில் ஊர்வலங்களை நடத்த அனுமதி கோரியதால் மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக போலீஸ் புலனாய்வு அறிக்கைகள் உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சர்ச்சைக்கு மத்தியில், கர்நாடக அரசு ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அரசு சொத்து அல்லது வளாகங்களைப் பயன்படுத்த முற்படும் எந்தவொரு தனியார் அமைப்பு அல்லது குழுவிற்கும் முன் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசாங்க உத்தரவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும், உத்தரவின் விதிகள் அமைப்பின் பாதை அணிவகுப்புகள் உட்பட அதன் செயல்பாடுகளை பாதிக்கும் நோக்கில் இருப்பதாகக் கூறப்படுகிறது. என்றாலும் இவ்விவகாரம் கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மோதலாக வெடித்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்த சித்தராமையா, ”ஆர்எஸ்எஸ்க்கு மட்டுமின்றி, அரசு நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் முன் அனுமதி இல்லாமல் யாரும் எந்த ஒரு நிகழ்வையும் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

சித்தராமையா

இதற்கு கடுமையாகப் பதிலளித்த பாஜக எம்பி ஜெகதீஷ் ஷெட்டர், காங்கிரஸ் அரசு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். இதற்கிடையே, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பேரணி அணிவகுப்புக்கு அனுமதி கோரும் மனுக்களை நவம்பர் 2ஆம் தேதி பரிசீலிக்குமாறு கர்நாடக உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பீம் ஆர்மி ஆகிய இரு தரப்பினரும் புதிய விண்ணப்பங்களை அந்தந்த துணை ஆணையர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், தாசில்தார் மற்றும் உள்ளூர் காவல்துறையினருக்கும் நகல்களை வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மோதலைத் தவிர்க்க இரு அமைப்புகளுக்கும் தனித்தனி நேர இடைவெளிகளை நிர்ணயிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.