மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த தமிழக அரசின் மனுவை விசாரிக்கக் கூடாது என கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது.
காவிரி ஆற்றில் புதிதாக மேகதாது அணையை 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மத்திய நீர்வள ஆணையத்திற்கு கர்நாடக அரசு அனுப்பிய வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் தமிழகம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்த திட்டம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அளித்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என முழக்கமிட்டனர்.
மேலும் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசின் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த சூழலில் கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று பதில் மனு தாக்கல் செய்ததுள்ளது. அதில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த தமிழக அரசின் மனுவை விசாரிக்கக் கூடாது என அதில் கூறியுள்ளது.
மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் அதிமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மேகதாது உள்ளிட்ட நீர்வளத் திட்டங்கள் குறித்து கடந்த புதன்கிழமை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி உடன் தமிழக எம்.பிக்கள் ஆலோசனை நடத்தினர்.