கர்நாடக உயர்நீதிமன்றம், பிரஜ்வல் ரேவண்ணா
கர்நாடக உயர்நீதிமன்றம், பிரஜ்வல் ரேவண்ணா ட்விட்டர்
இந்தியா

’தேவகவுடாவின் பேரனின் தேர்தல் வெற்றி செல்லாது’ - ஜேடிஎஸ் கட்சியின் ஒரு எம்பியும் பறிபோனது!

Prakash J

2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதியில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி சார்பில் நின்று வெற்றிபெற்றவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவர், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் ஆவார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் களம்கண்ட ஏ.மஞ்சு, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கலின்போது போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாக பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பாஜக வேட்பாளர் வழக்கு தொடர்ந்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கே.நடராஜன், ’2019 பொதுத் தேர்தலில் தேர்தல் ஆணையத்திடம் தவறான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததாகக் கூறி, மதச்சார்பற்ற ஜனதாதள எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணாவின் தேர்தல் வெற்றி செல்லாது’ என உத்தரவிட்டார். இந்த உத்தரவின் மூலம், பிரஜ்வல் ரேவண்ணா 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. இந்த தீர்ப்பை எதிர்த்து பிரஜ்வல் ரேவண்ணா மனு தாக்கல் செய்ய உள்ளார்.

அதன் அடிப்படையில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டால், அவர் எம்.பி. பதவியில் தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு துணைபோனதாக அவரது தந்தையும், முன்னாள் மந்திரியுமான எச்.டி.ரேவண்ணா, தம்பி சூரஜ் ரேவண்ணா எம்.எல்.சி. ஆகியோருக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கர்நாடகத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு மக்களவையில் ஒரே எம்.பி.தான் உள்ளார். அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளதால், மக்களவையில் அக்கட்சிக்கு எம்.பி. இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தேவகவுடா மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரஜ்வல் ரேவண்ணா தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்த ஏ.மஞ்சு, முன்பு பா.ஜனதா கட்சியில் இருந்தார். தற்போது அவர் ஜனதா தளம் (எஸ்) கட்சியில் எம்.எல்.ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.