இந்தியா

யார் இந்த வஜூபாய் வாலா ? ஆளுநராவதற்கு முன்பு என்ன செய்தார் ?

யார் இந்த வஜூபாய் வாலா ? ஆளுநராவதற்கு முன்பு என்ன செய்தார் ?

webteam

கர்நாடகாவில் அடுத்த ஆட்சியை முடிவு செய்யும் நிலையில் ஆளுநர் வஜூபாய் வாலா இருக்கிறார். அவர் எடுக்கப்போகும் முடிவு என்ன என்று நாடே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், யார் அந்த வஜூபாய் வாலா ? அவர் ஆளுநர் ஆவதற்கு முன்பு என்ன செய்துக்கொண்டிருந்தார் ? 

குஜராத் மாநிலம் சவுராஷ்டிரா பகுதியில் பிறந்த வஜுபாய் வாலா, 1937 ஆண்டு, ஜனவரி 23ஆம் தேதி பிறந்தவர்.‌ சட்டம் பயின்ற இவர், மாணவர் பருவத்திலேயே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். கடந்த 1975ஆம் ஆண்டு ராஜ்கோட் பகுதியில் கவுன்சிலராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய வஜுபாய் வாலா, அதன்பின் ராஜ்கோட் நகரத்திற்கே மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

ராஜ்கோட் மேற்கு‌ தொகுதியில் போட்டியிட்டு, பல முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட வஜுபாய், பிரதமர் மோடி, குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது, அவரது ஆட்சியில் 9 ஆண்டுகள் அமைச்சராக பதவி வகித்துள்ளார். நிதித்துறை, தொழிலாளர் நலத்துறை, வேலைவாய்ப்புத்துறை, பெட்ரோலியத்துறை, நகர்ப்புற வளர்சித்துறை என பல்வேறு இலாகாக்களை‌ வஜுபாய் வாலா கவனித்துள்ளார். 1996 மற்றும் 2005ஆம் ஆண்டு காலகட்டங்களில் 2 முறை பாரதிய ஜனதா கட்சியின் குஜராத் மாநிலத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார் வஜூபாய் வாலா. 2012 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில், குஜராத் மாநில‌ சட்டப் பேரவையின் சபாநாயகராவும் பதவி வகித்த வஜூபாய், கடந்த 2014 செப்டம்பர் மாதம் கர்நாடக மாநிலத்தின் ஆளுநராக நியக்கப்பட்டார். அது முதல் மூன்றரை ஆண்டு காலம் கர்நாடக மாநிலத்தில் ஆளுநராக வஜூபாய் வாலா பதவி வகித்து வருகிறார்.