கர்நாடகாவில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் (SIR) போது, சிறுபான்மையின வாக்காளர்களின் பெயர்களை முறைகேடாக நீக்க முயன்ற விவகாரத்தில், பாஜக தலைவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில், போலியான ஆவணங்கள் மூலம் நீக்கப்பட இருந்த வாக்காளர்களின் பெயர்களைச் சேர்க்கவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு முதல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (SIR)மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்களர் அட்டைகளைப் பெற்றிருந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள், வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தவர்கள் எனப் பல வாக்களர்கள் நீக்கப்பட்டனர். இதற்கிடையே, முக்கிய தலைவர்களின் பெயர்களே விடுபட்டிருந்ததும் பேசுபொருளானது. இதற்கிடையே, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு, இரண்டு தேர்தல் ஆணையர்களே எதிர்ப்பைப் பதிவு செய்திருந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து, நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் குரலெழுப்பி வருகின்றன.
இந்த நிலையில், கர்நாடகாவில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது, சிறுபான்மையின வாக்காளர்களின் பெயர்களை முறைகேடாக நீக்க முயன்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணைய விதிகளின்படி, ஒரு வாக்காளர் இறந்துவிட்டாலோ அல்லது வேறு தொகுதிக்கு மாறிச் சென்றுவிட்டாலோ அவரது பெயரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க படிவம்-7 (Form-7) பயன்படுத்தப்படும். இந்த விதியைத் தவறாகப் பயன்படுத்தி, கர்நாடகா மாநிலம் பெலகாவியில் வசிக்கும் 198 சிறுபான்மையின (முஸ்லிம்) வாக்காளர்கள் தங்கள் முகவரியில் இல்லை அல்லது இடம்பெயர்ந்துவிட்டனர் எனக் கூறி போலி ஆவணங்கள் மூலம் பா.ஜ.க தரப்பில் மொத்தமாக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் அனைவரும் அங்கேயே வசித்து வரும் நிலையில், அவர்களின் பெயர்களை நீக்க போலியாகக் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதேபோல், பீதர் தொகுதி மற்றும் மைசூருவிலும் நடந்ததாகவும், அதன்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் பெலகாவி வழக்கு தொடர்பாக பா.ஜ.க தலைவர் டாக்டர் ரவி பாட்டீல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 25 பேர் மீது காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், தவறான தகவல்களின் அடிப்படையில் பெயர் நீக்கப்பட இருந்த உண்மையான வாக்காளர்களின் பெயர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்கும் சிறப்பு நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.