கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில இஸ்லாமிய பெண்கள் தலையை மறைக்கும் உடை அணிந்து வருவது தொடர்பான சர்ச்சை நீடிக்கும் நிலையில், சீருடையை பின்பற்ற விரும்பாத மாணவ-மாணவியர் வேறு வாய்ப்புகளை தேடிக்கொள்ளலாம என அம்மாநில கல்வி அமைச்சர் பி.சி. நாகேஷ் அறிவித்திருப்பது பிரச்னையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
ராணுவத்தில் விதிகள் பின்பற்றப்படுவதைப் போல் கல்வி நிறுவனங்களிலும் விதிகள் பின்பற்றப்படவேண்டும் என அவர் தெரிவித்தார். மாணவர்கள் அரசியல் கட்சிகளின் கையில் பகடை காய்களாகிவிடவேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார். மாணவிகள் பள்ளிக்கு தலையை மறைக்கும் ஆடையை அணிந்து வரலாம், ஆனால் பள்ளி வளாகத்தில் சீருடையிலேயே இருக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டார். கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் அரசு பள்ளிகளில் சில இஸ்லாமிய மாணவிகள் தலையை மூடும் உடையை அணிந்து வரத் தொடங்கினர்.
இதற்கு பதிலடியாக சில இந்து மாணவிகளும் மாணவர்களும் காவி சால்வை அணிந்து வரத் தொடங்கினர். இந்த சர்ச்சைக்கு தீர்வு காண்பதற்கு முன்பே இது பிற பகுதிகளுக்கும் பரவியது. இதையடுத்து அமைதி, நல்லிணக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கை குலைக்கும் உடைகளுக்கு கல்வி நிறுவனங்களில் தடை விதித்து கர்நாடகா அரசு சுற்றறிக்கை வெளியிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் இது தொடர்பான வழக்கு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவிருக்கிறது.