விஜயபுரா மாநகராட்சி மேயர்
விஜயபுரா மாநகராட்சி மேயர் pt desk
இந்தியா

கர்நாடகா: பட்ஜெட் கூட்டத் தொடர்... குதிரை வண்டியில் வந்த விஜயபுரா மாநகராட்சி மேயர் - காரணம் என்ன?

webteam

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாநகராட்சி மேயராக இருப்பவர் மெஹஜாபீன் அப்துல் ரசாக் ஹார்டி. இவர் தனது வண்டிக்கு வாகன ஓட்டுநர் இல்லாததால் குதிரை வண்டியில் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம், அவருக்கு அரசு வாகனத்தை வழங்கியிருந்தாலும் அதன் ஓட்டுநருக்கு முறைப்படி சம்பளம் கொடுக்காமல் இழுத்தடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த ஓட்டுநர் சரிவர வேலைக்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

குதிரை வண்டி

இந்தநிலையில் விஜயபுரா மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டத் தொடர் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள செல்வதற்காக மேயர் மெஹஜாபீன் தனது வாகன ஓட்டுநரை அழைத்துள்ளார். ஆனால், இறுதிவரை வாகன ஓட்டுநர் வராததால், வேறு வழியின்றி அந்த வழியாக சென்ற குதிரை வண்டியில் ஏறி மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்துள்ளார். 11 மணிக்கு மாநகராட்சி கூட்டம் தொடங்க வேண்டிய நிலையில், குதிரை வண்டியில் பயணித்த மேயர் காலை 11:30 மணிக்குதான் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தடைந்தார்.

இதைத்தொடர்ந்து ஒருபுறம் மேயர் குதிரை வண்டியில் வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், மறுபுறம் டிரைவர் சம்பளம் பாக்கி குறித்த கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் ஓட்டுநர் சம்பள பாக்கி குறித்த எந்த தகவலையும் உறுதிபடுத்த மறுத்துள்ளனர்.