கர்நாடகாவின் யாத்கீர் நகரில், கிருஷ்ணா நதியின் மீதுள்ள பாலம் ஒன்றில், பைக்கில் வந்த கணவன் மனைவி இருவர், செல்பி எடுப்பதற்காக வண்டியை நிறுத்தியுள்ளனர். ஆனால், செல்பி எடுத்துக்கொண்டிருந்தபோது கணவன் திடீரென ஆற்றில் விழுந்திருக்கிறார்.
இவரது அலறல் சத்தத்தை கேட்ட உள்ளூர் கிராமவாசிகள் உடனடியாக விரைந்து ஒரு கயிற்றை ஆற்றில் வீசியுள்ளனர்.கயிற்றை அந்த நபர் பிடிக்கவே, அதனை மேல்நோக்கி இழுத்த உள்ளூர் வாசிகள் இறுதியாக அவரை மீட்டுள்ளனர். இதுதொடர்பான காட்சிகள் வெளியான காண்போரை அதிர்ச்சியடைய வைத்தது.
இதன்பின்னர், அந்த நபர் கூறிய வார்த்தைகள்தான் அங்கிருந்த உள்ளூர்வாசிகளை அதிர்ச்சியடைய வைத்தது.
கிராம மக்களிடம் பேசிய அந்த நபர் , ஆற்றில் அதிகளவு தண்ணீர் பெருக்கெடுத்துள்ளதால், செல்ஃபி எடுத்துக்கொள்ளலாம் என்று மனைவி கூறியதாகவும், செல்ஃபி எடுத்தவேளையில் தனது மனைவியே தன்னை ஆற்றில் தள்ளிவிட்டதாகவும் கூறினார்.
ஆனால், இதனை மறுத்த மனைவி தன்மீது கணவன் தவறான குற்றச்சாட்டை முன்வைப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியான வீடியோவில் தனது கணவரை காப்பாற்றும்படி அந்தபெண் கிராமவாசிகளிடம் கேட்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.
இந்த விவகாரம் குறித்து முறையான புகார் எதுவும் அளிக்கப்படவில்லை என்று பல தகவல்கள் கூறினாலும், குர்ஜாபூர் தடுப்பணையில் நின்று சில படங்களை எடுக்க தனது மனைவி வற்புறுத்தியதாக அந்த நபர் தனது புகாரில் கூறியுள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. இருவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்த நிலையில், அன்று முதலே கருத்து வேறுபாடு நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், இப்படியொரு அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.