கர்நாடக மாநிலம் சட்டசபை தேர்தலை எதிர் நோக்கியிருக்கிறது. மே 12ம் தேதி தேர்தலும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. வாக்குப் பதிவுக்கு இன்னும் 3 வாரங்கள் மட்டுமே உள்ளதால் அங்கு பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளது. வேட்பாளர்கள் பட்டியலை ஆளும், எதிர்க்கட்சிகள் கிட்டத்தட்ட அறிவித்துவிட்டன.
கர்நாடக மாநில தேர்தல் திருவிழாவை கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், அம்மாநிலத்தை சேர்ந்த சித்தப்பா தோத்தசிக்கன்னவர் என்பவர் தனது திருமண அழைப்பிதழை வாக்காளர் அடையாள அட்டை வடிவில் வடிவமைத்துள்ளார். ஹங்கல் நகரைச் சேர்ந்த சித்தப்பா, கோவாவில் ரயில்வே பணியில் உள்ளார். இவருக்கும் ரனிபென்னுரு நகரைச் சேர்ந்த ஜோதி என்பவருக்கும் ஏப்ரல் 27ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.
வாக்காளர் அட்டை போல் உள்ள சித்தப்பாவின் திருமண அழைப்பிதழிலில் மணமகன், மணமகளின் படம் உள்ளது. வாக்காளர் பெயர் என்ற இடத்தில், திருமண ஜோடிகளின் பெயர் என்று குறிப்பிட்டு இருவரது பெயரும் இடம்பெற்றுள்ளது. வாக்காளர் அட்டை எண் இருக்கும் இடத்தில் ‘SJMRG27042018’ என்ற எண் இடம்பெற்றுள்ளது. அதாவது SJMRG என்பது இருவரது இனிஷியல் எழுத்துக்கள். 27 04 2018 என்பது திருமண நாள். உங்கள் ஓட்டு முக்கியத்துவம் வாய்ந்தது என்ற வாசகமும் அதில் இடம்பெற்றுள்ளது. அத்துடன் குடும்பத்துடன் வாக்களிக்க மறந்துவிடாதீர்கள் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வித்தியாசமான அழைப்பிதழை சித்தப்பா தனது உறவினர்களுக்கு வழங்கி வருகிறார். அதோடு, கன்னட செயல்பாட்டாளரான அவர், தனது திருமண அழைப்பிதழை ஹவேரி துணை கமிஷனர் வெங்கடேஷ் மற்றும் எஸ்.பி பரஷுர்மா ஆகியோரிடம் வழங்கியுள்ளார்.