பெங்களூரில் கத்தியால் குத்தப்பட்ட லோக் ஆயுக்தா நீதிபதி விஷ்வநாத ஷெட்டியின் உடல்நிலை சீராக உள்ளதென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள லோக் ஆயுக்தா நீதிபதி விஷ்வநாத ஷெட்டியின் அலுவலகத்திற்கு மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார். அவரை யார் நீதிபதி கேட்க, அவர் முறையாக பதில் அளிக்காமல் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலை தடுக்க முயன்ற நீதிபதி, மூன்று முறை கத்திக்குத்தில் இருந்து தப்பியுள்ளார். இதையடுத்து அங்கு விரைந்த பாதுகாப்பு காவலர்கள் அந்த நபரை மடக்கிப்பிடித்தனர். அத்துடன் அவர் கையில் இருந்த கத்தியையும் பறித்தனர். இந்த தாக்குதலில் நீதிபதி காயமடைந்தார். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
விஷ்வநாத ஷெட்டி கடந்த ஆண்டு சிறந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது லோக் ஆயுக்தாவின் நீதிபதியாக உள்ளார். இந்நிலையில் அவர் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் அரசியல் பின்னணி ஏதேனும் இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தாக்கியவர் பெயர் தேஜஸ் சர்மா என்பதும், அவர் சற்றும் மனநலம் பாதிப்படைந்திருப்பதும் தெரியவந்துள்ளது.