இந்தியா

கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி ரவீந்திரநாத் 4-வது முறையாக மீண்டும் ராஜினாமா! இம்முறை காரணம் என்ன?

நிவேதா ஜெகராஜா

கர்நாடகாவில் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான ரவீந்திரநாத் தனது பதவியை ராஜினாமா செய்வதாக மீண்டும் அறிவித்துள்ளார்.

கர்நாடக மாநில மூத்த ஐபிஎஸ் அதிகாரியான ரவீந்திரநாத் அண்மையில் மனித உரிமைகள் அமலாக்க டிஜிபி பதவியிலிருந்து பயிற்சி பிரிவு டிஜிபி ஆக மாற்றப்பட்டிருந்தார். இந்நிலையில் ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். போலி சாதி சான்று கொடுத்த விவகாரம் தொடர்பாக தான் எடுத்த சட்ட நடவடிக்கைகள் எதிரொலியாகவே இடம் மாற்றம் செய்யப்பட்டதாக ரவீந்திரநாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் பணிக்காலம் முடியும் முன்பே தொல்லை தரும் நோக்கில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தலைமைச் செயலாளரின் நடவடிக்கைகள் வேதனை தருவதாகவும் தனது ராஜினாமா கடிதத்தில் ரவீந்திரநாத் கூறியுள்ளார்.

முன்னதாக கர்நாடகாவில் பலர் பட்டியலின சாதிச்சான்று பெற்று மோசடி செய்ததாகவும் இதில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பிருப்பதாகவும் இருந்த புகார்கள் மீது, ஐபிஎஸ் அதிகாரி ரவீந்திரநாத் நடவடிக்கை எடுத்துவந்தார். ரவீந்திரநாத் தன் மீதான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா கடிதம் அனுப்புவது இது 4ஆவது முறையாகும்.