video image x page
இந்தியா

”தயவுசெய்து என்னை பாஸ் செய்ய வையுங்கள்” - 500 ரூபாய் தாளுடன் கோரிக்கை வைத்த 10ஆம் வகுப்பு மாணவர்கள்!

கர்நாடகாவைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், தன்னை எப்படியாவது தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் அந்த தாளுடன் ரூ.500 தாளையும் வைத்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Prakash J

நாடு முழுவதும் 10 மற்றும் 11,12ஆம் வகுப்பு தேர்வுகள் பொதுத் தேர்வுகளாக நடத்தப்படுகின்றன. இதனால், மாணவர்கள் நன்றாகப் படித்தால்தான் அதில் தேர்ச்சி பெற முடியும். எனினும், சில மாணவர்கள் வழக்கம்போலவே கீழ்நிலை வகுப்புகளைப்போலவே எதிர்கொள்கின்றனர்.

இந்த நிலையில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு சமீபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்த மாதம் இதன் முடிவுகள் வெளியாக உள்ளன. இதற்கிடையே, கர்நாடகாவைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், தன்னை எப்படியாவது தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் அந்த தாளுடன் ரூ.500 தாளையும் வைத்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

video image

கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள சிக்கோடியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில், 10ஆம் வகுப்புத் தேர்வுகளுக்கான விடைத்தாள்களைத் திருத்திக் கொண்டிருந்த ஆசிரியர்கள்தான் இதைக் கண்டறிந்துள்ளனர். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், கல்வியுடன் காதலையும் தொடர்புபடுத்தி சில மாணவர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர். மாணவர் ஒருவர், “தயவுசெய்து என்னைத் தேர்ச்சி பெறச் செய்யுங்கள்; என் காதல் உங்கள் கைகளில்தான் உள்ளது" என எழுதி ரூ.500 பணத் தாளை ஒன்றையும் வைத்துள்ளார். மற்றொரு மாணவர், "நான் தேர்ச்சி பெற்றால் மட்டுமே என் காதலைத் தொடர முடியும்" எனக் கோரிக்கை வைத்துள்ளார். இன்னொரு மாணவர், "ஐயா, இந்த 500 ரூபாயுடன் தேநீர் அருந்துங்கள், தயவுசெய்து என்னைத் தேர்ச்சிப் பெற வையுங்கள்” என எழுதியுள்ளார். மேலும் ஒரு மாணவர், "நீங்கள் என்னைத் தேர்ச்சி பெறவைத்தால், நான் உங்களுக்குப் பணம் தருகிறேன்" என்று எழுதியுள்ளார். இன்னொருவர், ”நீங்கள் என்னை தேர்ச்சி பெற வைக்கவில்லை என்றால், என் பெற்றோர் என்னை கல்லூரிக்கு அனுப்பமாட்டார்கள்" எனத் தெரிவித்துள்ளார். இன்னும் சிலரோ, ”எங்களுடைய எதிர்காலமே இந்த முக்கியமான தேர்ச்சி பெறுவதைப் பொறுத்தது” எனத் தெரிவித்துள்ளனர். இந்தப் பதிவுகள்தான் இணையத்தில் வைரலாகி வருகின்றன.