சிறை pt web
இந்தியா

கர்நாடகா | காதலருடன் வாழ்ந்த மனைவி.. கணவரை சிறைக்கு அனுப்பிய போலீஸார்!

மனைவியைக் கொலை செய்த குற்றத்திற்காக 2 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த நபர், சில நாட்களுக்கு முன்பு அவரது மனைவி உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

Prakash J

கர்நாடகாவின் குடகு மாவட்டம் குஷால்நகர் தாலுகாவைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி மல்லிகே. இந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு தனது மனைவியை காணவில்லை என்று சுரேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கிடையே, மைசூரு மாவட்டத்தில் உள்ள பெட்டடபுரா காவல் நிலைய எல்லையில் ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கிடைத்துள்ளது. இது மல்லிகேவின் உடல் என்றும், அவரை சுரேஷ்தான் கொன்று போட்டுள்ளார் என்றும் போலீஸார் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். சுரேஷிடமும் வலியுறுத்தி வாக்குமூலம் வாங்கியுள்ளனர். இதனையடுத்து மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக சுரேஷ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் டிஎன்ஏ பரிசோதனையில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் மல்லிகேவின் உடையது அல்ல என்று நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து சுரேஷ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி இந்த வழக்கில் திடீர் திருப்பமாக தனது மனைவி ஓர் உணவகத்தில் அவரது ஆண் நண்பருடன் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை சுரேஷ் பார்த்துள்ளார். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து சுரேஷின் மனைவியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். காணாமலே போன சுரேஷின் மனைவி தனது காதலனுடன் வாழ்ந்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். காவல்துறையினரின் தவறுகளை தீவிரமாகக் கவனத்தில் கொண்ட நீதிமன்றம், ஏப்ரல் 17ஆம் தேதிக்குள் வழக்கு குறித்த முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது.

karnataka

இதற்கிடையே நீதிமன்றத்தில் மல்லிகே, ​​வேறொருவருடன் சென்று வாழ்ந்து வருவதை ஒப்புக்கொண்டார். கணவர் சுரேஷுக்கு என்ன நடந்தது என்று தனக்குத் தெரியாது என்றும், மடிகேரியிலிருந்து 25-30 கி.மீ தொலைவில் உள்ள ஷெட்டிஹள்ளி என்ற கிராமத்தில் தாம் வசித்தபோதும், போலீஸார் தன்னைக் கண்டுபிடிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுரேஷ் தரப்பு வழக்கறிஞர், “இது மிகவும் தீவிரமான வழக்கு. அது யாருடைய எலும்புக்கூடு, காவல்துறை ஏன் தவறான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது? இந்த வழக்கில் எஸ்பி மற்றும் விசாரணை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் ஆனால் அவர்களிடம் எந்த பதில்களும் இல்லை. சுரேஷ் நிரபராதி என்று தீர்ப்பை வழங்குவதற்கு முன்பு, ஏப்ரல் 17ஆம் தேதிக்குள் குறைபாடுகள் குறித்த முழுமையான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு எஸ்பிக்கு உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம். உத்தரவுக்குப் பிறகு தனது கட்சிக்காரர் அனுபவித்த அதிர்ச்சி குறித்தும், தனக்கு எதிராக பொய் வழக்குப் பதிவு செய்ததற்காக காவல்துறையினருக்கு எதிராகவும் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்வேன். சுரேஷ் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஏழை என்பதால், நாங்கள் மனித உரிமைகள் ஆணையம் மற்றும் எஸ்டி ஆணையத்தையும் அணுகுவோம். மேலும், எலும்புக்கூடு வழக்கில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், சுரேஷை குற்றம்சாட்டப்பட்டவராகக் குறிப்பிட்டு இரண்டு வழக்குகளையும் முடிக்க காவல்துறையினரால் சதி நடந்ததா என விசாரணை நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.