இந்தியா

நித்தியானந்தா எங்கு இருக்கிறார்? - அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி

webteam

நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பதை டிசம்பர் 12ஆம் தேதிக்குள் கர்நாடக அரசும், கர்நாடக போலீசாரும் உறுதி செய்து அதை நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆசிரமத்தில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக நித்யானந்தா மீது ஆர்த்தி ராவ் என்பவர் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் கர்நாடக சிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை ராம்நகர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சிஐடி போலீசாரால் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, தற்போது சாட்சிகள் விசாரணை தொடங்கியுள்ளது. 

சாட்சிகள் விசாரணையின்போது நித்யானந்தா நேரில் ஆஜராக வேண்டும் என ஆர்த்திராவ் தரப்பிலும், அரசு வழக்கறிஞர் தரப்பிலும் நீதிமன்றத்தில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. ஆனால் வழக்கில் சாட்சிகள் விசாரணையின்போது நித்தியானந்தா ஆஜராக வேண்டிய அவசியமில்லை என உயர் நீதிமன்ற ஆணை உள்ளதால், நித்யானந்தா சாட்சிகள் விசாரணையின்போது ஆஜராக விலக்கு அளித்தது ராம் நகர் நீதிமன்றம். வழக்கு விசாரணை நாளை தொடர்ந்து நடைபெறும் என நீதிபதி அறிவித்தார். 

இதனிடையே லெனின் கருப்பன் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நித்யானந்தா மீது ராம்நகர் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் நித்தியானந்தாவை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட வேண்டும் என்றும் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையில் கர்நாடக உயர்நீதிமன்றம் வரும் 12ஆம் தேதிக்குள் நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பதை போலீசாரும், அரசும் அறிந்து அதை நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.